ஞாயிறு, 30 மே, 2010

அந்தக் கடவுளுக்கு இது தெரியுமா?


பக்தி ஒரு பிசினஸ் என்று சொன்னால் சிலருக்குக் கோபம் பொத்துக் கொண்டு கிளம்புகிறது. ஆனந்தவிகடனில் 26.05.2010 வெளிவந்துள்ள இந்தக் கட்டுரைக்கு என்ன பதிலோ?

பிரார்த்தனை என்பது கடவுளுடன் உரையாடுவது. அதாவது, கடவுள் கேட்டுக்கொண்டு இருப்பார்... நம் மீது அக்கறை கொள்வார் என்று மனத்-துயர்களைப் பகிர்ந்துகொள்வது. அதற்காகத்தான் பெரும்பான்மையினர் கோயில்களுக்குப் போகிறார்கள்... வழிபடுகிறார்கள்.

கோயில் என்றதும் மனதில் சில சித்திரங்கள் தோன்றுகின்றன. வானு-யர்ந்த கோபுரத்தின் கம்பீரம், அகன்ற வாசல் கதவுகள். வெண்கலக் குமிழ் பதித்த படிகள். கோபுர வாசலில் நிற்கும் முகப்படாம் பூண்ட யானை. உள்ளே நடந்தால் செவியை நிறைக்கும் நாதஸ்வர மேளத்துடன் கூடிய மங்கள இசை. அபூர்வமான சிற்ப வேலைப்பாடு நிறைந்த தூண்கள். சுவர் ஓவியங்கள். அந்த ஓவியங்களைக் கூட உயிர்பெறச் செய்யும் ஓதுவாரின் தெய்விகக் குரல். கல் விளக்குகள். அதன் ஒளிர்விடும் சுடர்கள்.

பகலிலும் பாதி இருண்ட கர்ப்பக்-கிரகம். தீப ஒளியில் காணும் தெய்வ உருவங்கள். அதன் சர்வ அலங்காரம். பூ வேலை. மனதை ஒருமுகப்படுத்தும் மணி-யோசை. கண்மூடி, கைகூப்பி, தன்னை மறந்து நிற்கும் மனிதர்கள், அவர்களின் மெல்லிய உதட்டு அசைவுகள்; அவரவர் பிரார்த்தனைகள். சூடம் எரியும் மணம். சந்தனம், விபூதி, குங்குமம் அல்லது துளசித் தீர்த்தம். நீண்ட அமைதியான பிரகாரம். அங்கே அமர்ந்து ருசிமிக்க பிரசாதம் உண்டு, பிரச்சினைகளைக் கடவுளிடம் ஒப்படைத்துவிட்டோம். இனி, நிம்மதியாக வீடு திரும்பலாம் என ஆசுவாசம்கொள்ளும் முகங்கள்.

கோயிலைவிட்டு வெளியேறும் மனிதன் முகத்தில் சாந்தமும் நிம்மதியும் ஒன்று கூடியிருக்கும். இதுதான் கோயில் குறித்த எனது கடந்த கால நினைவு-கள். இந்தியாவின் பழைமையான, முக்கிய, பெரும்பான்மையான கோயில்-களுக்குச் சென்று இருக்கிறேன். வழி-பாடுகள், பிரார்த்தனைகளைவிடவும் கோயில் சார்ந்த சிற்ப ஓவியக் கலைகள் மற்றும் இசை மீது எனக்கு அதிக ஆர்வம் உண்டு. அதற்காகத் தேடித் தேடிப் பார்த்து இருக்கிறேன். சில கோயில்களை அதன் வடிவமைப்-பாகவும் அங்கு நிரம்பியுள்ள நிசப்தத்-துக்காகவும் தேடிப் போய் வருவேன்.

ஆனால், நடைமுறையில் தமிழகத்-தில் உள்ள புகழ்பெற்ற கோயில்கள் இப்படியா இருக்கின்றன. கோயில் வாசல் படியில் ஆரம்பித்து, வெளி-யேறும் வழி வரை நடைபெறும் வசூல்-வேட்டைக்கு நிகராக வேறு எங்குமே காண முடியாது. கோயிலுக்குள் செல்லும்போது குற்றவாளிகூட மனத் துய்மை பெறுவான் என்று சொல்-வார்கள். இன்றோ, கோயிலுக்குச் சென்று நிம்மதியைத் தொலைத்து வந்த கதை தமிழகத்தில் பலருக்கும் நடந்திருக்கிறது. கோயில்களில் நடைபெறும் தரிசன முறைகேடுகள், கையூட்டுகள், அதிகார அத்துமீறல்கள் பட்டியலிட முடியாதவை.

சில வாரங்களுக்கு முன்பாக நண்பர் ஒருவர் குழந்தைக்கு மொட்டை அடிக்க வேண்டும் என்று புகழ்பெற்ற கோயில் ஒன்றுக்குக் கிளம்பிக்கொண்டு இருந்-தார். வழி நெடுகப் பேசிக்கொண்டே காரில் போகலாம் என்று என்னையும் உடன் அழைத்து இருந்தார்.

பயணம் இனிமையாக இருந்தது. கோயில் அருகில் உள்ள விடுதியில் இரவு தங்கினோம். காலை 6 மணிக்குக் குழந்தைகள் மொட்டை போடும் இடத்துக்குச் சென்றோம். ஒரே கூட்டம். அதற்கான கட்டணச் சீட்டு வழங்கும் இடத்துக்குச் சென்று, சீட்டு வாங்கி ஒரு நாவிதர் முன்பு குழந்தையோடு உட்-கார்ந்தவுடன், அவர் தனக்குத் தனியாக 50 ரூபாய் தர வேண்டும் என்றபடியே குழந்தையின் தலையில் தண்ணீர் தெளித்தார். அதற்குத் தானே சீட்டு என்று நண்பர் கட்டணச் சீட்டைக் காட்டியதும், அது அப்படித்தான்... கொடுங்கள் என்று 50 ரூபாயைக் கேட்டு வாங்கிக் கொண்டார்.

குழந்தையின் தலையை அவர் கையாண்ட விதம் பெற்றோர்களைப் பயமுறுத்தியது. குழந்தை பயத்தில் அழுது வீறிட்டது. சுகாதாரம் அற்ற பிளேடு. வேகமாக இழுத்ததில் தலையில் ரத்தம். டெட்டால் பாட்டில்கூட அருகில் கிடையாது. அழுக்குத் துண்டால் குழந்தையின் தலையைத் துடைத்து விட்டு, அழைத்துப் போய்க் குளிக்க வையுங்கள் என்றார். எங்கே என்றதும் அழுக்கான தண்ணீர்க் குழாயைக் காட்டினார். அங்கே எப்படிக் குளிக்கவைப்பது என்றதும், அருகில் உள்ள குளியல் அறையில் போய்க் குளிக்க இன்னொரு 50 ரூபாய் கொடுங்கள் என்றார். அதைத் தந்து, குழந்தையைக் குளிக்கவைத்து, சந்தனம் தடவினார்கள். சந்தனம் வாசனையே இல்லை. கடலை மாவு போன்று இருந்-தது. ஆனால், அதன் விலை 40 ரூபாய்!

கோயில் உள்ளே செல்லும் முன்-பாகப் பூஜைப் பொருள்கள் வாங்கலாம் என்றால், அந்தக் கடைகளில் தேங்காய், பழத்தின் விலை 60 ரூபாய் என்றார்கள். ஒரு தேங்காய், இரண்டு வாழைப்பழம் 60 ரூபாயா என்று யாரும் கேட்க-வில்லை. பூ மாலை 200 ரூபாய். அதை-யும் மறுப்பு இன்றி வாங்கிக்கொண்-டார்கள். செருப்பு விடும் இடத்தில் கட்டணம் எதுவும் இல்லை என்று போட்டு இருந்தது. ஓர் ஆள் அய்ந்து ரூபாய் வசூல் செய்துகொண்டு இருந்தான். அதுவும் மறுபேச்சு இன்றித் தரவேண்டியதாகியது.

உள்ளே செல்லும்போது பொது தரிசனம், சிறப்புத் தரிசனம், வி.அய்.பி. தரிசனம் என்று மூன்று வகை. ஒவ்வொருவருக்கும் ஒரு கட்டணம். அதில் ஆளுக்கு 250 ரூபாய் கொடுத்து சிறப்புத் தரிசன டிக்கெட் வாங்கிக்-கொண்டார்கள். அந்த வரிசையும் நீண்டு இருந்தது. அந்த வரிசையில் முன்னே அழைத்தப் போகிறேன், தனியாக 100 ரூபாய் கொடுங்கள் என்று கோயில் ஊழியர் ஒருவர், தனியே அழைத்துப் போனார். அங்கே பணியில் நின்றிருந்த காவலர், தனக்கு ஏதாவது தரும்படியாகக் கேட்டதும் அவருக்குத் தனியே 50 ரூபாய் தரப்பட்டது.

சரி, சாமியைப் பார்க்கப் போகிறோம் என்று உள்ளே சென்றால்,அங்கே முக்கியப் பிரமுகரின் குடும்பம் ஒன்று சாவகாசமாக, சாமியை மறைத்து உட்கார்ந்து கொண்டு பூஜையில் இருந்தது. வீட்டில் நடப்பது போன்று அவர்களுக்காகவே ஒரு சிறப்பு பூஜை நடந்துகொண்டு இருந்தது. அது முடியும் வரை மற்றவர்கள் காத்-திருங்கள் என்றார்கள். குழந்தை காற்று இல்-லாமல் அழுதது. அதை இடை-யூறாகக் கருதிய முக்கியப் பிரமுகர், குழந்தையை வெளியே அழைத்துச் செல்லுங்கள் என்று கோபப்பட்டார்.

அந்தப் பிரமுகருக்கு மாலை மரியாதை அணிவிக்கப்பட்டு, தட்டில் அவர் சில 500 ரூபாய்களை அள்ளிப்-போட்டு எழுந்த பிறகு, கடவுள் மற்றவர்களுக்குத் தெரிய ஆரம்பித்தார். கூட்டம் அதிகம். சாமியைப் பார்த்தது போதும்... வெளியே போங்கள் என விரட்டிக்கொண்டு இருந்தார்கள். உண்டியலில் பணம் போட வேண்-டாம், தட்டுக் காணிக்கை போடுங்கள் என்ற குரல் இடைவிடாமல் கேட்டுக்கொண்டே இருந்தது.

கூட்டத்தில் சிக்கிய குழந்தை அழுது, உதடு துடித்துப் போனது. அவசரமாகக் குழந்தையைக் கடவுள் முன் காட்டி விட்டு வெளியே வந்தோம். குழந்-தைக்குத் தாகமாக இருக்கக் கூடும் என்று பாட்டி சொன்னார். தண்ணீர் எங்கே கிடைக்கும் எனத் தேடினால், கோயிலில் சுகாதாரமான குடிநீர் கிடையாது. வெளியேதான் போக-வேண்டும் என்றார்கள். பிரகாரத்தில் அமர்ந்தபடியே ஏன்டா கோயிலுக்கு வந்தோம் என்று ஒரு குடும்பம் புலம்பிக் கொண்டு இருந்தது. ஒரு வெள்ளைக்-காரர் அங்கிருந்த ஒரு சிலையைப் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தார். புகைப்படம் எடுக்கக்கூடாது என்று கோயில் ஊழியர் மிரட்டியதும், அவர் தன் பாக்கெட்டில் இருந்து 100 ரூபாயை எடுத்து நீட்டினார். வாங்கிக் கொண்டு அந்த ஊழியர் சிரித்தபடியே வெளியேறினார்.

சரி, பிரசாதமாவது வாங்கி வருகிறேன் என்று போன நண்பர் அசதியோடு திரும்பி வந்து, ஒரே கொள்ளையா இருக்கு. பிரசாதம் விலை அதிகம். வாய்ல வைக்கவே முடியலை என்று புலம்பினார். கோயிலுக்கு வந்ததுக்கு சாமிப்படம் ஒன்று வாங்கிக்கொள்ளலாம் என்று அருகில் உள்ள கடைக்குப் போய், நண்பரின் மனைவி விலையைக் கேட்டதும் அவருக்குத் தலை சுற்றியது.

ஏழை எளிய மக்கள் நிம்மதியும் சாந்தியும் தேடி வரும் கோயில்கள் ஏன் இப்படிக் கொள்ளை அடிக்கும் மய்யமாக மாறிப்போனது. காசை வாரி இறைத்தால் மட்டுமே கடவுளை அருகில் சென்று வணங்க முடியும் என்ற அவலத்தை ஏன் சகித்துக்-கொண்டு இருக்கிறோம். கோயில், கொடியவர்களின் கூடாரமாகிவிடக்-கூடாது என்று கொதித்து எழுந்தான் பராசக்தி படத்தில் குணசேகரன். ஆனால், இன்று தமிழகக் கோயில்-களைப்போல பக்தர்களைத் துச்சமாக, அவமரியாதையாக நடத்தும் கோயில்-கள் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.

பல லட்சம் பேர் கலந்துகொள்ளும் ஹரித்துவாரின் கும்பமேளாவில் ஓர் இடம்கூட அசுத்தமாக இல்லை. குப்பைகள், கழிவுகளைக் காண முடி-யாது. அவ்வளவு தூய்மை பராமரிக்-கப்படுகிறது. தரிசனம் துவங்கி, சாப்-பாடு, தங்கும் இடம் வரை அத்தனையும் இலவசம். ஆனால், தொடரும் தமிழகக் கோயில்களின் அவலத்தைப் போக்-கும்படியாக ஏதாவது ஒரு கடவுளிடம் முறையிட வேண்டும் என்றால்கூட அதற்கும் நாம் சாசு செலவழித்தே ஆக வேண்டிய துர்பாக்கிய நிலைதான்.

சத்யஜித் ரே ஜனசத்ரு என்ற ஒரு வங்காளப் படத்தை இயக்கி உள்ளார். அற்புதமான படம். இப்சனின் நாடகத்தை மய்யமாகக் கொண்டது. ஒரு கோயில் குளத்தில் உள்ள தண்ணீர் பராமரிப்பு இல்லாமல் இருந்ததால், கிருமிகள் நிறைந்திருந்தன. அதைத் தீர்த்தமாகப் பக்தர்களுக்குத் தரு-கிறார்கள். அதனால், ஒரு நோய் பரவத் துவங்குகிறது. இதைப்பற்றி ஆராய்ந்த மருத்துவர் ஒருவர், கோயில் குளம்தான் இதற்குக் காரணம். எனவே, அதைத் தற்காலிகமாக மூடிவிடுங்கள் என்று அறிவுறுத்துகிறார்.

அதை ஒருவரும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அத்துடன், கடவுளின் புனிதக் குளத்தை ஏளனம் செய்கிறார் என்று அவர் மீது கோபப்படுகிறார்கள். அவரோ, தான் சொல்வது மக்கள் ஆரோக்கியம் தொடர்பான அக்கறை. அதில் புனித மறுப்பு என்று எதுவும் இல்லை. தயவு செய்து புரிந்து-கொள்ளுங்கள் என்கிறார். சொந்தக் குடும்பம்கூட அதைப் புரிந்து கொள்-ளாமல் போகிறது. மக்கள் விரோதியாக அவர் சித்திரிக்கப்பட்டு, அவருக்கு எதிராகப் போராட்டம் நடை-பெறுகிறது. பக்தியின் பெயரால் நாம் ஏன் பகுத்தறிவை, விஞ்ஞானத்தை மறந்து போனோம் என்று மருத்துவர் கவலைப்படுகிறார். இந்தக் கவலை திரைப்படத்தில் இடம் பெற்ற விஷயம் மட்டும் இல்லை. நம்மைச் சுற்றிய கோயில்களின் முறைகேடுகளைக் காணும் போதும் அதே கேள்வியே மனதில் எழுகிறது. அதற்கான மாற்று-வழிதான் தெரியாமல் இருக்கிறது.

நன்றி: ஆனந்த விகடன் 26.05.2010

இறைவா, இது என்ன சோதனை?

மின்சாரம்
இது நாம் கொடுத்த தலைப்பு அல்ல! தினமலர் பார்ப்பன ஏடு கொடுத்த தலைப்பு!

காளஹஸ்தி ராஜகோபுரம் இடிந்து வீழ்ந்தது அல்லவா! இடிந்து வீழ்ந்து சுக்கல் நூறாகச் சிதறிக் கிடக்கும் படங்களைப் போட்டு அதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்புதான் இறைவா இது என்ன சோதனை?

ராஜ கோபுரம் இடிந்து வீழ்ந்தது. இறைவனுக்குத் தான் சோதனையே தவிர மற்றவர்களுக்கு அல்ல! நியாய-மாக இந்தக் கேள்வி மாற்றித் தலை கீழாகக் கேட்கப்பட்டு இருக்க வேண்டும்.

இறைவா உனக்கு ஏன் இந்த சோதனை? என்று கேட்டு இருந்தால் தினமலர் கூட்டத்துக்குப் புத்தி கொஞ்சம் வேலை செய்ய ஆரம்பித்-திருக்கிறது என்று கருத இடம் உண்டு.

பஞ்ச பூதத்தலங்களில் ஒன்று என்று பகவானை ஆகாயத்தில் தூக்கி வைத்துக் கொஞ்சுவது. இறைஞ்சுவது. அந்தப் பகவானின் சக்திக்குச் சவால் வந்து விட்ட பிறகு பகவான் சோதிக்-கிறான் என்பது பச்சையான பசப்புத்-தனம் என்பதல்லாமல் வேறு என்னவாம்?

பக்தியின் பரிதாபப் பள்ளத்தாக்கில் வீழ்ந்து கிடக்கும் பாமரர்கள் விழித்த விடக் கூடாது. வீழ்ந்த பள்ளத்திலேயே மீண்டும் மீண்டும் உருண்டு புரள வேண்டும் என்ற சூழ்ச்சிதான் இதில் அடங்கியிருக்கிறது.

ஒவ்வொரு கோயிலுக்கும் தலப் புராணங்களை எழுதிக் குவித்து வைத்துள்ளார்களே. அதில் குடி கொண்ட பகவானின் பராக்கிரமங் களையெல்லாம் பத்தி பத்தியாக குவித்து வைத்துள்ளார்களே!

கோயில் திருக்குளத்துக்குப் பதிகங்கள் பாடி வைத்திருக்கிறார்களே! மதுரைப் பொற்றாமரைக் குளத்தில் குளித்தெழுந்தால் தாயைப் புணர்ந்த பாவமும் கூடப் போடும் என்று தங்களின் பார்ப்பனக் கோரப் புத்தியைப் பதிவு செய்து வைத்துள்ளார்களே.

முதலையுண்ட பாலகனை மீட்டது எது? எலும்பைப் பெண்ணுருவாக்கியது எது?

இந்தக் கடவுள் சக்திகள் எல்லாம் காணாமல் போனது ஏன்?

காளஹஸ்தியில் கோயில் அருகே ஓடும் நதியில் குளித்தால் ராகு _ கேது படித்த பாவங்கள் போகுமாம்.

ஜெகன்மோகினி என்ற திரைப்-படத்தில் விட்டலாச்சாரியார் காட்டிய காட்சி அது! நாயும், ஆடும் தோஷம் நீங்கப் பெற்றனவாம். அந்தத் திரைப்படம் வெளிவந்ததற்குப் பிறகு அக்கோயி-லுக்குப் பக்தர்கள் திரள ஆரம்பித்தார்-களாம். நல்ல வசூலாம் -_ இடிந்து கிடந்த கோயிலைச் செப்பனிட்டார்-களாம். பல ஆண்டுகளுக்குப்பின் அந்தப் பகுதிக்கு விட்டலாச்சாரியார் சென்றபோது கோயில் பார்ப்பனர்களும், பக்தர்களும் சூழ்ந்து கொண்டு நன்றி தெரிவித்தார்களாம்.

காளஹஸ்தி கோவிலுக்குப் புனர்-வாழ்வு வந்ததுகூட, ஜெகன்மோகினி திரைப்படத்தின் மூலம்தான் என்பது காளஹஸ்தி அப்பனுக்குப் புகழ் சேர்க்-குமா? விட்டலாச்சாரியார் அல்லவா சாதனையைத் தட்டிக்கொண்டு போகிறார்!

அதுவும் கோபுரம் என்றால் சாதாரணமா? கோபுரம் இறைவனின் திருவடிகளைக் குறிக்கிறதாம். அதனால் கோபுரத்தரிசனம் விசேஷமானது என்கிறார்கள் ஆகமவாதிகள்.

அந்த இறைவனின் திருவடி உடைந்து சுக்கல் நூறாகிப் போய் விட்டதே! இதற்கு எந்தக் கட்டுப் போடப் போகிறார்கள்? புத்தூர் கட்டுதானா?

ஆமாம், வாஸ்து பார்த்துத்தானே கோயிலையும், கோபுரத்தையும் கட்டி-யிருப்பார்கள்? அப்படி இருக்கும்போது ராஜ கோபுரம் தலைகுப்புற வீழ்ந்தது ஏன்?

வாஸ்துவின் வண்ட வாளமும் தாண்டவாளத்தில் ஏறிவிட்டதே! இனி எதை வைத்துக் கோயிலையோ, கோபுரத்தையோ, கோயிலுக்குள் குந்த வைக்கப்பட்டுள்ள கடவுளையோ காப்பாற்றப் போகிறார்கள்?

பக்தி பெருகிவிட்டது; பக்தி பெருகிவிட்டது. பகுத்தறிவாளர்களே, நீங்கள் தோல்வி அடைந்து விட்டீர்கள் என்று பம்மாத்துப் பேசும் பக்தர்கள், காளஹஸ்தி அப்பனின் கோபுரம் குப்புற வீழ்ந்து மீசையில் மண் ஒட்டிய பிறகு உங்கள் பக்தியை ஒருமுறை புரட்டிப் போட்டுச் சிந்திப்பீர்களா? கடவுள் கல் என்று கறுப்புச் சட்டைக்-காரர்கள் சொன்னது சரியாகப் போய்விட்டது என்று ஒப்புக்கொள்ளும் அறிவு நாணயம் உங்களுக்கு உண்டா?

பிழைப்புக் கெட்டுப் போய்விடுமே. பகவானுக்கு ஒரு ஹானி என்றால் அது பார்ப்பனர் வயிற்றுச் சோற்றுக்கு வந்த திண்டாட்டமாயிற்றே! உயர்ஜாதி மமதையின் மீது விழுந்த மண்வெட்டி அடியாயிற்றே!

விட்டுக் கொடுத்து விடுவார்களா? உடனே ஜோதிடக்கட்டை எடுத்துப் புறப்பட்டு விட்டார்கள்.

ஏதோ.. ஏதோ தெரியவில்லை; நாட்-டுக்குச் சோதனை! உடனே பரிகாரம் காணப்பட வேண்டும்; அல்லா விட்-டால் ஆபத்துக்கு அணை கட்ட முடி-யாது என்று தோல்வியையும் வெற்றிக்-கான தோரணையாக மாற்றி விடு-வார்கள்.

மக்களிடம்தான் பயபக்தி (பயமும் பக்தியும்) பயங்கரமாகக் இருக்கிறதே! இந்த முதலீடு ஒன்று போதாதா பிழைக்கத் தெரிந்த பிர்மாவின் முகத்தில் பிறந்த பிரிவினருக்கு?

பிரசித்தி பெற்ற காளஹஸ்தி சிவன் கோயில் ராஜகோபுரம் இடிந்து வீழ்ந்த-தால் சில ராசிக்காரர்களுக்கு குறிப்பாக, ராகு, கேது ராசிக்காரர்களுக்குச் சோதனை ஏற்படுமாம். அரசியல் தலைவர்களுக்கும் ஆபத்து நேரிடுமாம்.

இந்த இரு கிரகங்களுக்கும் உரியவர்கள் உடனே பரிகாரப் பூஜைகளில் ஈடுபட வேண்டுமாம். பரிகாரப் பூஜை செய்தால்தானே பார்ப்பான் வீட்டுக் கல்லாப் பெட்டி நிரம்பி வழியும்?

அரசியல்வாதிகளுக்கு ஆபத்து என்று சொன்னால்தானே கனமான வருமானம் கணக்கில் காட்டாத கறுப் புப் பணக் கத்தைகள் வந்து குவியும் (பரவாயில்லை ஜெயலலிதா முந்திக் கொண்டார்; கடந்த வாரம்தான் காளஹஸ்தி சென்று பூஜைகள் நடத்திக் கனமான வகையில் கவனித்து விட்டு வந்தார்).

ஜோதிடர் பூவை நாராயணன் கூறுகிறார் கேளுங்கள்:

பொதுவாக கோயில் கோபுரம் இடிந்து விழுதல், கொடிமரம் எரிதல் போன்ற நடக்கக்கூடாத வினோத சம்பவங்கள் ஏற்படுவது தேச நலனைப் பாதிக்கும்.

இதற்கு வைரணாச கல்ப சூத்திரத் தில் கூறியுள்ளபடி பஞ்ச சுக்தங்களைப் படித்து அற்புத சாந்தி ஹோமம் செய்ய வேண்டும்.

புரிகிறதா! ஹோமத்திலேயே அற்புத ஹோமமாம். தொகை அதிகம் என்று பொருள். கோபுரம் இருந்தாலும் கொள்ளை! கோபுரம் இடிந்து வீழ்ந்தாலும் கொள்ளை! இப்படி எது நடந்தாலும் சுரண்டல் கொள்ளைக்கு வசதி செய்து வைத்துள்ள பார்ப்பன சூழ்ச்சி _ உலகில் வேறு எங்கும் கேள்விப்பட்டிட முடியாத ஒன்று.

அண்டப் புளுகு ஆகாயப் புளுகு என்பதற்கு மேலாக இன்னொன்று இருக்கிறது!

அதுதான் இந்துமதப் புளுகு! பார்ப்பனீயப் புளுகு!

ராகு கேது கிரகதோஷம் என்கிறார்களே, அப்படி ஏதாவது கிரகங்கள் உண்டு என்று எந்த விஞ்ஞானத்தில் கூறப்பட்டுள்ளது? இல்லாத கிரகங்களுக்குத் தோஷமாம். யாகமாம். பூஜையாம். அட, அக்கிரமமே உன்பெயர்தான் அக்கிரகாரமா?

நன்றி- விடுதலை