வெள்ளி, 15 அக்டோபர், 2010

அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள அத்தனைக் கோயில்களையும் அகற்றுக!


                      உச்சநீதி மன்றத்தின் வரவேற்கத்தக்க ஆணை




நடைபாதைக் கோயில்கள், பொது இடங்களில் அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ள அனைத்து மத வழிபாட்டுக் கோயில்களையும், சின்னங்களையும் உடனடியாக அகற்றுமாறு உச்சநீதிமன்றம் செப் 14 அன்று ஆணையிட்டுள்ளது.



நாடெங்கும் அனுமதி பெறாது போக்குவரத்துக்கு இடை யூறாகவும், பலருடைய தனி வருவாய்க்கு வழி செய்யவும் பல நூற்றுக்கணக்கான நடைபாதைக் கோயில்களைக் கட்டியிருக் கிறார்கள்;



இதேபோல வேறு மத வழிபாட்டுச் சின்னங்களும்கூட தோன்றியுள்ளன; (இவை விகிதாச்சாரத்தில் மிகவும் குறைவு தான்) இவைகளை அகற்றவேண்டும் - இது பொதுமக்களின் வசதிக்கு மிகப்பெரிய இடையூறு என்பதை பலமுறை சுட்டிக் காட்டப்பட்டது பகுத்தறிவாளர்களால், திராவிடர் கழகத்தவர்களால், மதச்சார்பின்மையாளர்களால் (Secularists).



அனுமதியின்றி இந்தத் திடீர்க் கோயில்கள் அரசு அலுவலக வளாகங்களில், அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கோயில்கள் கட்டப்படுகின்றன. பல மதத்தவர் மத நம்பிக்கையற்ற பகுத்தறிவாளர்கள் உள்ள பொது அரசுப் பணிமனைகளில், பொது இடங்களில் பலர் வேண்டுமென்றே மற்ற மதத்தவர்களை வம்புக்கு இழுப்பதற்கோ அல்லது மதவெறியைப் பரப்புவதற்கோ உள்நோக்கத்துடன் கட்டப்பட்டவைகளும் உண்டு.



இதை எதிர்த்து நாகர்கோவில் முதல் சென்னை, திருத்தணி எல்லைவரை உள்ள பல ஊர்களில் சென்னை மாநகரம் உள்பட - கட்டப்படும் கோயில்களை, வழிபாட்டு நிலையங்களை (தனியா ருக்கு வருவாய் மூலங்களும் ஆகும்) எதிர்த்து திராவிடர் கழகத்தவர்கள் போட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளன.



தஞ்சை, திருச்சி போன்ற பெருநகரங்களில் - தஞ்சை, திருச்சி மருத்துவக் கல்லூரி வளாகங்களில் கட்டப்பட்ட கோயில்களை இடிக்க நீதிமன்றத் தீர்ப்புகளுக்குப் பின்னரும்கூட, ஆங்காங்குள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களோ, மற்ற அதிகாரிகளோ, அவைகளை இடித்து அப்புறப்படுத்துவதை ஏனோ ஏதேதோ சாக்குக் கூறி காலந்தாழ்த்தி வருகின்றனர்!



உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, ஆணைக்குப் பிறகும் காலந்தாழ்த்தக்கூடாது.



திருச்சி, மதுரை போன்ற பல மாவட்டங்களில் உள்ளவற்றை அகற்ற மதுரை உயர்நீதிமன்றத்தால் சில ஆண்டுகளுக்குமுன் தீர்ப்பு வழங்கப்பட்டு, அகற்ற ஆணை பிறப்பித்த நிலையில்கூட, சில ஊர்களில் இடித்தனர்; பிறகு மெத்தனமாகக் கிடப்பில் போடப்பட்டு-விட்டது.



இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த முற்போக்குக் கருத்துள்ள தீர்ப்பு, காலத்தால் கிடைத்த அருமையான பாராட்டி வரவேற்கவேண்டிய தீர்ப்பு!



இத்தீர்ப்பினை உடனடியாக அமல்படுத்தத் தவறிய மாநிலங்களின் அரசு தலைமைச் செயலாளர்களை நேரில் வருமாறு அழைப்போம்; விளக்கம் கேட்போம் என்று கூறியுள்ளது மிகச் சரியானதே!



தீர்ப்பை அமல்படுத்த, வற்புறுத்திட காலக் கெடுவுடன்கூடிய (Time Bound) அகற்றல் நடவடிக்கைக்குச் சரியான ஆணை மிகவும் தேவை.



உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்-பட்டுள்ள சில தகவல்கள் எவரையும் வியப்பில் ஆழ்த்தக் கூடியதாக உள்ளன.



தமிழ்நாட்டில் - பெரியார் பிறந்த மண்ணில் - பகுத்தறிவாளர் ஆளும் இம்மாநிலத்தில் உள்ள நடைபாதைக் கோயில்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாம்!



கிழக்கே உள்ள அருணாச்சல பிரதேசத்தை உச்சநீதிமன்றம் பாராட்டி உள்ளது. அங்குதான் அனுமதியற்ற ஒரு வழிபாட்டு நிலையம்கூட இல்லை என்பதற்காக!



மத்திய அரசு, மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் (பாண்டிச்சேரி, டில்லி போன்றவைகள்) இத்தகைய அனுமதியற்று எழுப்பப்படும் வழிபாட்டு நிலையங்களை அகற்றிட, ஒரு கொள்கை திட்டத்தை உருவாக்கவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.



எனவே, தமிழ்நாடு அரசு இதில் உடனடியாக அக்கறை செலுத்தி, தயவு தாட்சண்யமின்றி இடித்து அகற்றிடவேண்டும்.



ஆக்கிரமிப்புக் கட்டடங்களை அகற்றிட முன்வருதல் போலவே, அரசு, மாநகராட்சி, காவல்துறை உதவியுடன் செய்யவேண்டும்.



திராவிடர் கழகத்தவர்கள், பகுத்தறிவாளர்-கள் ஆங்காங்கே உடனடியாக இதனைச் சுட்டிக்காட்டி, உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமலாக்க உதவிகரமாக இருக்கவேண்டும்; இருப்பார்கள் என்பது உறுதி.



தமிழக அரசின் தலைமைச் செயலாளரும் இதில் கவனம் செலுத்திட முன்வரவேண்டும்.



அவசரம் - அவசியம்.



- கி.வீரமணி, ஆசிரியர்

பெரியாரிடமா சோதிடம்?

சோதிடம் என்பது பொய்- அது ஒரு ஏமாற்று வித்தை என்று தந்தை பெரியார் அவர்கள் எவ்வளவோ எடுத்துச் சொன்னதோடு மட்டுமல்லாமல், தனது வாழ்க்கை மூலமாகவே சோதிடத்தின் முகமூடியைக் கிழித்தெறிந்து காட்டி விட்டார்கள்.



அய்யா அவர்களது பெற்றோர்கள் அய்யா அவர்களுடைய ஜாதகத்தைக் கணித்து வைத்தி ருந்தார்கள். அதில் தந்தை பெரியார் அவர் களுக்கு ஆயுள்காலம் 60 வருடம் என்று எழுதப்பட் டிருந்தது. ஆனால், அதற்கு மேலும் 35 ஆண்டுகள் வாழ்ந்து காட்டி, இந்த சோதிடப் பித்தலாட் டத்தைத் தோலுரித்துக் காட்டிவிட்டரே!

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

மதவாதிகளுக்கு மூக்குடைப்பு!

                                                            மணிமகன்    


அரசுகள் அமைந்த காலத்தில் இருந்து மதங்களின் தலையீடு இருந்தே வந்துள்ளது. மதங்களுக்குள் சண்டைகள் ஏற்பட்டபோதும், மதவாதிகள் ஆட்சியாளர்களாக இருந்தபோதும் நாடுகளுக்குள் மோதல்களும் உண்டாயின. மதமோதல்களால் இரு நாடுகளுக்கு இடையே சண்டை மூண்டதும் உண்டு. மண்பிடிக்கும் போர்களால் ஏற்பட்ட பேரழிவைவிட மதச் சண்டைகளால் உருவான போர்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளே அதிகம் என்று வரலாறு பாடம் சொல்கிறது.



மக்களின் வாழ்க்கைக்குப் பாடுபட உருவான அரசு என்னும் அமைப்பில், மதம் வந்து புகுந்துகொண்டதால் ஏற்பட்டவை இழப்புகளே அன்றி ஏற்பவை எதுவும் இல்லை. பிரஞ்சுப்-புரட்சிக்குப்பின் ஜனநாயகம் என்ற கருத்தியலின் மீதும், ருஷ்யப்புரட்சிக்குப் பின் சோசலிசம் குறித்த விழிப்புணர்வினாலும் 19 ஆம் நூற்றாண்டுக்குப் பின் மக்களிடம் அரசையும், மததையும் பிரித்துப் பார்க்கும் எண்ணம் உருவானது என்று சொல்லலாம்.பின்னர் மீண்டும் ஹிட்லரின் கொடுங்கோன்மையை ஆரிய இன வல்லாண்மையின் பெயரில் உலகம் கண்டது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஜனநாயகமும், சோசலிசமும் அரசுக்-கான கருத்தியலாக வடிவம் கொண்டன. ஆனாலும், மதத்தின் தலையீடு அரசியலில் இருந்தே வந்துள்ளது.



இன்றளவும் மத ஆதிக்கம் பல்வேறு நாடுகளின் அரசுகளில் உள்ளதைப் பார்த்துக் கொண்டுதான் உள்ளோம்.வளகுடாப் போர்கள், ஈராக் மீதான அமெரிக்காவின் படையெடுப்பு, ஆப்கானிஸ்தான், பின்லேடன் விவகாரங்-களுக்குள்ளும் மதங்களின் பங்களிப்பு இல்லாமல் இல்லை.



இத்தகைய சூழலில் அரசுகளில் மதங்களின் தலையீடு கூடாது என்ற முழக்கத்தை மதநம்பிக்-கையற்றவர்கள், நாத்திகர்கள், மனிதநேயர்கள் பல ஆண்டுகளாக எழுப்பி வருகிறார்கள். உண்-மையான மதச்சார்பற்ற அரசுகளே எல்லா மக்களையும் சமமாகப் பாவிக்கும் எண்ணம் கொண்டவையாக இருக்க முடியும். எந்த மதத்தையும் சாராதவரே எல்லா மதத்தவரையும் மனிதனாகப் பார்ப்பவராக இருப்பார். இப்படி ஒருவராக அண்மையில் ஆஸ்திரேலியாவின் பிரதமராகப் பொறுப்-பேற்றார் ஜூலியா கில்லார்ட்.



ஆஸ்திரேலியாவை ஆளும் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஜூலியா கில்லார்ட், ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். ஓர் ஆணும், ஒரு பெண்ணும் சேர்ந்து வாழும் வாழ்க்கையில் திருமணம் என்ற பந்தம் தேவையற்றது என்ற எண்ணம் கொண்ட இவர், திருமணம் செய்து-கொள்ளாமல் தன் வாழ்க்கைத் துணைவருடன் வாழ்ந்து வருகிறார். அதுமட்டுமல்ல, ஆஸ்திரேலியா-வின் கடந்த 106 ஆண்டுகால ஜனநாயக அரசியல் வரலாற்றில், முதன்முதலாக வெளிப்படையாக தன்னை ஒரு நாத்திகவாதி என்று பிரகடனப்படுத்திய பிரதமரும் ஜூலியா கில்லார்ட்தான்.பொறுப்பார்களா மதவாதிகள்; தங்களின் தாக்குதல்களைத் தொடங்கினர்.



பிரதமராகப் பதவியேற்ற ஆறு வாரங்களுக்குள், இன்னும் மூன்று மாதம் தள்ளி நடத்தவேண்டிய தேர்தலை உடனடியாக நடத்த ஜூலியா கில்லார்ட் உத்தரவிட்டார். ஜூலியா பிரதமரின் அரசு மாளிகையில் குடியேறவும் இல்லை. நான் தலைமையேற்று நடத்தாத தேர்தலில், கட்சியின் முடிவால் பிரதமராகப் பொறுப்-பேற்றேன். இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானால், அரசு மாளிகையில் குடியேறுவேன் என்று கூறிவிட்டார்.



ஒரு அநாகரிகப் பேர்வழி, ஜூலியா மீது முட்டைகளைக் கூட அடித்தான். இவற்றையெல்லாம் எதிர்கொண்டு புயல் வேகத்தில் ஆஸ்திரேலியாவைச் சுற்றிப் பிரச்சாரம் செய்தார். இவரது பிரச்சாரம் சூடுபிடித்த சூழலில் மேற்கு ஆஸ்திரேலியத் தலைநகர், பெர்த்தில் உள்ள கத்தோலிக்க மதத்தின் ஆர்ச் பிஷப் பேர்ரி ஹிக்கி என்பவர் நாத்திகருக்கு வாக்களிப்பதா? என விஷம் கக்கினார்.







பேர்ரி ஹிக்கி வெளியிட்ட அறிக்கையில், நாத்திகம் தலைதூக்குவது நாட்டிற்கு நல்லதல்ல. நாத்திகர்கள் ஆண்ட கிழக்கு அய்ரோப்பிய நாடுகளில், என்ன நடந்தது என்பதை நாம் கண்கூடாகக் கண்டோம். அரசியலில் மதச்சார்பின்மை வளர்வது விரும்பத்தகாத விளைவுகளை உண்டாக்கும். எனவே, நாத்திக நம்பிக்கை கொண்ட ஜூலியா கில்லார்ட்டிற்கு, எந்த மதத்தையும் சாராத ஜூலியா கில்லாட்டிற்கு வாக்களித்தால் அவர்கள் தேவாலயங்களைப் புறந்தள்ளுவார்கள், பாரம்பரிய கிறித்துவ மரபிலிருந்து வழுவுவார்கள். அது நாட்டிற்கும், மக்களுக்கும் நல்லதல்ல என்று பதறினார். அதோடு நிற்காமல், எதிர்க்கட்சித் தலைவரான, டோனி அபட், ஆழ்ந்த மத நம்பிக்கை உடைய கிறித்துவர். ஆகவே, அவருக்கு வாக்களிப்பதே நல்லது என்ற கருத்துப்பட தனது அறிவிப்பை வெளியிட்டார்.மதத் தலைவரின் கருத்து இது என்று மக்கள் யாரும் வாய்மூடி மௌனமாய் இருக்கவில்லை. அரசியலில் மதகுரு எப்படி தலையிடலாம்? என மக்கள் கொதித்து-விட்டனர். தொலைக்காட்சி, வானொலி, இணையதளம் என எல்லா ஊடகங்களிலும் மக்கள் பிஷப்பின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.



இந்தப் பிரச்சினை குறித்துக் கருத்துத் தெரிவித்தவர்களில் பிஷப்பின் கருத்துக்கு எதிராகக் கருத்துச் சொன்னவர்கள் 80 சதவீதம் பேர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் மிக நுணுக்கமாகவும், நேர்படவும் கருத்துச்சொன்னவர்கள் அதிகம்.பிக்டன் என்ற பகுதியைச் சேர்ந்த மஹ்மூத் என்பவர், இவரைப் போன்றவர்களிடமிருந்து (பிஷப் பேர்ரி ஹிக்கி) இதற்குமேல் எதிர்பார்க்க முடியாது. அவருடைய உடையைப் பாருங்களேன். ஒரு ஆண் பேயைப் போல இல்லை? மவுடீகங்களும், மூடப் பழக்கங்களும், முட்டாள்தனங்களும் அரசாங்கங்களை அண்டத் துடிப்பதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது, என்கிறார். பெர்த் பகுதியைச் சேர்ந்த சாண்ட்ரா என்பவரது கருத்து இன்னும் ஆழமானது. அவர் சொல்கிறார், ஹாய் மிஸ்டர் ஹிக்கி! அண்மையில் போர்ச்சுகல், கிரீஸ், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதே, அதன் காரணம் என்ன தெரியுமா? அந்த நாடுகளில் எல்லாம் அரசிலும், அரசியலிலும் மதக் கிறுக்கு பிடித்த பைத்தியக்காரர்கள் இடைவிடாது தலையிட்டு வந்தார்கள். நாட்டை நட்டப் பாதைக்கு வழி நடத்தினார்கள்.



வருமான வரி செலுத்தத் தேவையில்லாத சொர்க்க நிலையில் இருந்து கொண்டு வரி, செலுத்துகின்ற நாங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் அல்லது வாக்களிக்கக் கூடாது என்று புராணக் குப்பைகளை நம்பிக் கொண்டு இருக்கக் கூடிய பாதிரிகள் யாரும் எங்களுக்குக் கூற வேண்டியதில்லை. பெரும்பாலான மக்கள், தாங்கள் எப்படி மற்றவரால் நடத்தப்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களோ, அதேபோல்-தான் மற்றவரையும் நடத்தவேண்டும் என்ற எளிமையான வாழ்வியலோடுதான் வாழ்-கிறார்கள். அப்படி வாழும் மக்களுக்கு, மதவாதி, பகுத்தறிவுவாதி, நாத்திக வாதி என்ற எந்த முத்திரையும் தேவையில்லை, என்கிறார்.



கத்தோலிக்க திருச்சபை அரசுக்கு வரி செலுத்-தாதது ஏன்? இவர்கள் நடத்தும் பள்ளிகளுக்கு அரசு மானியம் அளிப்பது சரியா? என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.



உலகிலுள்ள பல நாடுகளில், அந்நாட்டுப் பழங்குடியினரது பண்பாட்டை, மொழியைச் சிதைத்து பெருங்கொடுமை செய்தது மதங்கள்-தான். மதங்களையோ, கடவுளையோ நம்பாத காரணத்தாலேயே நான் ஜூலியாவிற்கு வாக்களிக்கப் போகிறேன் என்று மெஸ்ஸ் 303 என்பவர் கூறியிருக்கிறார், நாத்திகத்திற்கு, மதங்கள்(!) கூறுவதைப் போன்ற ஒழுக்கக் கோட்பாடுகள் இல்லை என்று யார் சொன்னது? நாத்திகம் என்பது ஒரு கிளப்போ, நிறுவனமோ அல்லது ஒரு சிறு கூட்டமோ அல்ல. நாத்திகம் என்பது ஒருவருடைய தனிப்பட்ட கோட்பாடு. மதங்கள் ஊட்டுகிற வெறுப்பையும், மூட நம்பிக்கை-களையும் தவிர்த்து வாழும் நாத்திகர்கள் அனைவரும் சராசரிக்கு அதிகமான நிலையிலுள்ள ஒழுக்கக் கோட்பாடுகளைப் பேணுகிறார்கள். நான் ஒரு கிறித்துவன்.



கிறித்துவ நம்பிக்கைக் கொண்ட பிரதமர்கள் எல்லாம் வலதுசாரி, பழைமைவாதிகளாகவே இருக்கிறார்கள். இயேசு நாதர், மதமும் அரசும் தனித்தனியாகத்தான் இருக்கவேண்டும் என்று சொன்னார். ஆனால், அவரைக் கொன்றவர்கள் அரசையும், மதத்தையும் பிரித்துப் பார்க்கவில்லை. ஆகவே, மத நம்பிக்கை கொண்டவரைவிட, மதத்தையும், அரசையும் பிரித்துப் பார்க்கும் நாத்திகருக்கு வாக்களிப்பதுதான் சிறந்தது, என்று பெர்த்பகுதியைச்சேர்ந்த ஜான் என்பவர் கூறுகிறார். அரசியலில் மதத்திற்கு இடமில்லை.



பாதிரிமார்கள் அரசியலின் பக்கம் தலை வைத்துப்படுக்கவே கூடாது!, ஒவ்வொரு மனிதனும் ஏதாவதொரு மதத்தை நம்பித்தான் ஆகவேண்டுமா என்ன? மதங்களை நம்புவோர் அவர்களுடைய நம்பிக்கைகளை அவர்களுக்-குள்ளேயே வைத்துக் கொள்ளட்டும், முட்டாள்-தனமான மதங்களும், மதம் சார்ந்த அரசியல் கொள்கைகளும் உலகில் நடத்தி உள்ள போர்கள் ஏராளம். ஜூலியா கிறித்துவராக இல்லாவிட்டால் யாருக்கென்ன நட்டம்? என்ற கருத்துகளும் பலரால் சொல்லப்பட்டுள்ளன.



ஆஸ்திரேலியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு நாத்திகம் குறித்தும்,மத எதிர்ப்புக்-கருத்துகளும் தேர்தலில் முக்கியப் பிரச்சினையாக முன்னிறுத்தப்பட்டன. ஆனால், மதவாதிகள் எதிர்-பார்த்தது நடக்கவில்லை.அரசையும் மதத்தையும் பிரித்துப் பார்க்கும் பக்குவத்தை மக்கள் அங்கே பெற்றுவிட்டனர் என்பதையே இந்தக் கருத்துகள் எதிரொலிக்கின்றன. நாத்திகர்-கள்-தான் நடுநிலையாளர்கள் என்கிற கருத்து மேலோங்கி வருவதையே இது காட்டுகிறது.



தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்-பட்டுக்கொண்டுள்ள நிலையில் ஜூலியா கில்லார்டின் தொழிலாளர் கட்சிக்கு அறுதிப்-பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், சரிபகுதி வாக்குகளைப் பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. வாக்கு சதவீதத்திலும் மற்ற கட்சிகளைவிட முன்னிலை-யில் உள்ளது.



தன்னை நாத்திகர் என்று அறிவித்துக் கொண்ட ஒருவருக்கு மக்கள் பெருமளவு வாக்களித்-துள்ளார்கள். அவர்கள் தங்களை ஆள்பவர் அரசை நடத்தத்தகுதி உள்ளவரா என்று-தான் பார்த்துள்ளார்களே தவிர, அவர் மதவாதியா, நாத்திகரா என்றெல்லாம் பார்க்க-வில்லை. மதம் சார்ந்திருப்பதும், மதத்தை சாராமல் இருப்பதும் ஒருவரது தனிப்பட்ட உரிமை. அதனை அரசியலில் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற கருத்தை ஆஸ்திரேலியா தேர்தல் எடுத்துக் காட்டியிருக்கிறது.



தவிரவும், மதவாதிகள் அரசியலில் நுழைவதை நாகரீக சமுதாயம் விரும்பவில்லை என்பதையும் இந்த முடிவுகள் உணர்த்துகின்றன. உலக அரசியலின் பொது அரங்கில் மதம் சாராத நாத்திகர்களின் மதிப்பும், மரியாதையும் மென்மேலும் உயர்ந்து வருவதை உலகம் உற்றுநோக்கத் தொடங்கி-விட்டது. மதங்களின் ஆதிக்கத்தை விடுத்து, மனித-நேயத்தை முன்னிறுத்தவேண்டிய அவசியத்தை எஞ்சிய நாடுகளும்,உலகளாவிய அரசியல்வாதி-களும் உணரவேண்டிய தருணம் இதுதான்.



                                                              
                                                   நன்றி-உண்மை

                                                                                                                       

பிள்ளையாருக்கு 15 மனைவிகளாம்!



பிள்ளையார்பற்றி கதைகள் ஏராளம் உண்டு. பலவற்றிலும் - எல்லாம் கட்டுக்கதை புராணங்கள் தானே - தமிழ்நாட்டில் அது இறக்குமதி கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகுதானே!

அபிதான சிந்தாமணி 1910இல் வெளிவந்த அந்தக்கால தமிழ் கலைக்களஞ்சியம் - என்சைக்ளோ பீடியா!



அதில் பிள்ளையாருக்கு 15 மனைவிகள் உண்டு என்று சுட்டிக்காட்டப்பட்டு இருக்கின்றன!

1. சித்தி என்ற மனைவி

2. புத்தி என்ற மனைவி

(சித்தி புத்தி விநாயகர் என்றால், இரண்டு மனைவிமார்களையும் இணைத்ததுபோலும்!)

3. மோதை

4. பிரமோதை

5. சுமகை

6. சுந்தரி

7. மனோரமை

8. மங்கலை

9. கேசினி

10. காந்தை

11. சாருகாசை

12. சுமத்திமை

13. நந்தினி

14. காமதை

15. வல்லபை

முதலியவரை மணந்தனர்.

பக்கம் 1751, விநாயகர் தலைப்பு

பக்தர்களே, பிள்ளையார்தான் வல்லபை கணபதி வரலாறு எவ்வளவு ஆபாசம் - சிதம்பரத்திலும், மத்தூரிலும் இந்த கணபதி உள்ளது.

(திருவல்லிக்கேணி கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து, 18.9.2010).

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

மறுபிறப்பா?





சைலர்ட் (CYLERT) என்ற வணிகப் பெயருள்ள மருந்து ஒன்று விலங்குகளின் கற்கும் திறன்களை மேம்படுத்துவதாக கூறப்படுகிறது. இதை உருவாக்கி உள்ளவர்கள் அய்க்கிய அமெரிக் காவைச் சேர்ந்த அபட் ஆய்வகத் தார் (லேபரட்டரீஸ்). நினைவுத் திறனுக்கு ஆர்என்ஏ ஒரு முக்கிய பங்கு வகிப்பதாக அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மக் னீசியம் பெமோலைனின் செயல் பாட்டால் மூளையின் நரம்பணுக் களில் ஆர்என்ஏ அதிக வேகமாக உருவாக்கப்படுகிறது. இந்த அதி கரித்த வேகமே, இம்மருந்தால் நினைவுத்திறன் அதிகரிப்பதற்கு காரணம் என கருதுகிறார் டாக்டர் கிளாஸ்கி .

மறுபிறவி பற்றி ஆய்வு நடத்தும் நம்மூர்க்காரர்களுக்கு இந்த செய்தி மிகுந்த உற்சாகத்தை அளிக்கக் கூடும். நம் பையன் களுக்கும் பெண்களுக்கும் சைலர்ட் கொடுப் பதன் மூலம், அவர்கள் தம் முற்பிறவிகள் பற்றி அதிகமதிகம் நினைவுகூர உதவ முடியும். சைலர்ட்டை கூடுதலாக கொடுப்ப தன்மூலம் பெரியவர்கள்கூட தம் முற்பிறவி நிகழ்ச்சிகளை நினைவு கூரச் செய்ய முடியும்.

மூளை நரம்பணுக்களில் உள்ள ஆர்என்ஏ மூலக்கூறுகள்தான் நினைவுத் திறனின் அடிப்படை ஆகும். என்றால், சாவுக்குப்பின் மூளை சிதைந்த பிறகு நினைவு மட்டும் எப்படி தங்கி இருக்க முடியும்? அப்படியானால் முற் பிறவிகளின் நினைவுகள் என அடிக்கடி கூறப்படும் கதை களுக்கு இனி நாம் என்ன மதிப்பு தர முடியும்?

மூன்று ஆண்டு எட்டு மாதம் வயதான சிறுபெண் ஆலிவ் சாமலதா ரஞ்சிபிரேமா, தன் முற்பிறவியில் தனக்கு பெற்றோ ராக இருந்தவர்களின் வீட்டை சுட்டிக் காட்டியதும் அவளது இப்பிறவிப் பெற்றோருக்கு முதலில் பிரமிப்பே ஏற்பட்டது. அந்த வீட்டில்தான், தன் தாய் தந்தையர் வசித்தனர் என்று அவர்களிடம் அவள் கூறினாள். இன்னொரு நாள் ஒரு பெண்ணை சுட்டிக் காட்டி, தன் முந்திய பிறவியில், தான் அவளைப் போல்தான் இருந்ததாக தெரிவித்தாள். (த.சன்).

உள்ளூரைச் சேர்ந்த ஒரு சிறுமி, தேகிவாலா விலங்குக் காட்சி சாலைகளில் உள்ள விலங்குகளில் ஒன்றை சுட்டிக் காட்டி தன் முந்திய பிறவியில், தான் அதைப் போலவே இருந்த தாகக் கூறும் சுவையான கதையைக் கேட்க இன்னும் நாம் காத்துக் கொண்டிருக் கிறோம்! தன் முற்பிறவியில், தான் ஒரு விலங்காக இருந்த தாக தன் நினைவுகளில் இருந்து கூர்ந்து கூற முடிகிற ஒரே ஒரு குழந்தையைக்கூட இன்னும் நம் மறுபிறப்பு ஆராய்ச்சிக்காரர்கள் எவரும் சந்திக்க முடியாதது ஏனோ?

மறுபிறப்பு பற்றி விளக் கங்கள் அளிப்போரிடம் நாம் கேட்பது என்னவென்றால், ஆலிவும் முன்பிறப்பில் அவள் யாரைப் போல் இருந்தாளோ அந்த மற்ற பெண்ணும் ஒரே பிறவியில் பிறக்க முடிந்தது எப்படி? அப்படியானால் ஒரே ஆளே, அவர் இறந்தபின் இரட் டைப் பிறவிகளாய் அன்றி இரண்டு வெவ்வேறு ஆள் களாக திரும்பப் பிறப்பது சாத் தியமா?

டாக்டர் ஏ.டி.கோவூர்

நாஸ்திகத்தின் நன்மை

ம.சிங்காரவேலு


நாஸ்திகத்தின் நன்மையைச் சற்று நோக்குவோம். இது விஷயமாகப் பிராட்லா என்பார் (Humanity’s gain from unbelief) என்ற நூலில், நாஸ்திகத்தில் உலகமடைந்து வரும் நன்மைகளை விளக்கியுள்ளார். இங்கு அதனைச் சுருங்க உரைப்போம்.

1. அடிமைத்தனம், (Slavery) அதாவது மக்களை விலங்குகளைப்போல் விற்கவும், வாங்கவுமான ஸ்தாபனம் நாஸ்திகத்தால் ஒழிக்கப்பட்டது. எல்லா மதங்களும் அதனை ஆதரித்தும் பாராமுகமாய் இருந்தும் வந்தன.

2. நோய்கள் (Disease) பேய் பிசாசுகளால் (Evil Spirit) உண்டாவதாக நினைத்துவந்த மூடநம்பிக்கை மிகுதியாக உலகம் முழுமையும் ஒழிந்தது. இந்த மூடநம்பிக்கையை மதங்கள் வளர்த்து வந்தன.

3. தெய்வமாடுதல், குறி சொல்லுதல், ஜோசியம் முதலிய பித்து வழக்கங்கள் நாஸ்திகத்தால் குறைவுற்றன.

4. பிசாசு பிடித்தவர்களென்று மந்திரக் காரர்களையும் பைத்தியக்காரர்களையும் கொன்று இம்சிக்கும் பழக்கத்தை நிறுத்தியது நாஸ்திகமே.

5. அபிப்பிராய வித்தியாசத்தால் நேரிடும் கொலைகள் குறைந்து வருவதும் நாஸ் திகத்தால்தான்.

6. பஞ்சம், தரித்திரம், வறுமை முதலிய கஷ்டங்கள் கடவுள் கோபத்தால் உண்டாவதாக எண்ணிவந்த மூடநம்பிக்கை ஒழிந்ததும் நாஸ்திகத்தால்தான்.

7. கொடுங்கோல் மன்னர் ஆணவத்தை அடக்கி வருவதும் நாஸ்திகமே.

8. சுதந்திரம், சமத்துவம், முதலிய தாராள நோக்கங்கள் உலகில் பரவி வருதல் நாஸ்திகத்தால். (Question Not) கேட்காதே என்ற ஆணவத்தை எதிர்த்து விசாரிக்கும் மனப்பான்மையை வளர்ப்பதும் நாஸ்திகமே.

9. அக்கிரமம், அநியாயம், அறியாமை, தயை தாட்சண்யமின்றி ஒழிக்கப்பட்டு வருவதும் நாஸ்திகத்தால் தான்.

10. கோடானுகோடி பசித்து வருந்திக் கிடக்கும் மக்களுக்கு மூடப்பழக்கங்களி லிருந்து எழுங்கள். ஊக்கத்தையும், தைரி யத்தையும் கைவிடாதீர்கள். உலகிற்கும், உங்களுக்கும் பொருளாதாரத் தாழ்வால் வந்திருக்கின்றது கேடு. அதனைப் போக்கி உலக முழுமையும் களஞ்சியமாகும் கல்வி யும், சாந்தமும், சமாதானமும், நிலவச் செய் யுங்கள் என்று கூவி அழைப்பதும் நாஸ் திகமே.

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

சண்டை!



அனைவரையும் படைத் தவர் கடவுள் என்கின்றனர் அப்படிப் பார்க்கும்பொழுது கடவுள் அனைவருக்கும் தகப்பன் ஆகிறார்.

உண்மையான தகப்ப னார் தன் பிள்ளைகளை வேறுபடுத்திப் பார்ப்பாரா? அப்படிப் பார்த்தால் அவர் யோக்கியமான தகப்பனாகத் தான் மதிக்கப்பட முடியுமா?

நாட்டில் என்ன நடக் கிறது. ஒரு கட்டத்தில் கோயி லுக்குள் தாழ்த்தப்பட்டவர் கள் போகக்கூடாது என்று தடை போட்டார்கள். அதற் காகப் போராட்டம் நடத்தப் பட்டு, அந்த உரிமை கிடைக்கப் பெற்றது.

குறிப்பிட்ட ஜாதியினர் தான் சாமியைத் தொட முடியும், குளிப்பாட்ட முடியும், பூஜை செய்ய முடியும் என்று சுவர் எழுப்பி வைத்தனர்.

அதனை உடைக்க அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்னும் சட்டம் திராவிடர் கழகத்தின் முயற்சியால், தி.மு.க. ஆட்சி யில் இயற்றப்பட்டு, அனைத்து ஜாதியினருக்கும் 69 சத விகித இட ஒதுக்கீடு அடிப் படையில் பயிற்சியும் அளிக் கப்பட்டு, இந்துக் கோயில் கருவறைக்குள் இந்து மதத் தைச் சேர்ந்த எந்த ஜாதி யினரும் அர்ச்சகராக ஆணை பிறப்பிக்கப்படவி ருந்த ஒரு காலகட்டத்தில், அதனையும் எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றுவிட்டனர் பிரம்மாவின் முகத்தில் பிறந்ததாகத் தங்களுக்குத் தாங்களே எழுதி வைத்துக் கொண்ட பார்ப்பனர்கள்.

ஏடுகளில் ஒரு சேதி இன்று வந்தது. பண்ருட்டி வட்டம் பல்லவராயநத்தம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்கு முத்துமாரியம்மன் சாமி ஊர்வலம் செல்லத் தடையாம்.

கோயிலுக்குமுன் வைக் கப்படும் மரத்தால் ஆன முத்துமாரியம்மனை வேண்டு மானால் தாழ்த்தப்பட்டவர்கள் கும்பிட்டுத் தொலையலாமாம். சாமி சிலையில்கூட மற்றவர் களுக்கு உலோகத்தால் ஆனது; தாழ்த்தப்பட்டவர் களுக்கு மரத்தால் ஆனதாம்.

அடேயப்பா, இந்தக் கடவு ளைப்பற்றி எப்படி எப்படியெல் லாம் குலுக்கி மினுக்கி எழுதித் தள்ளியுள்ளார்கள்? அன்பே உருவானவர் காருண்ய மூர்த்தி, சகல உயிர்களையும் படைத்த சக்தி படைத்தவர் உருவமற்றவர் அரூபி என்று ஒரு பக் கத்தில் கிறுக்கி வைத்து விட்டு, இன்னொரு பக்கத் தில், கடவுளுக்கு உருவம் வைத்து பெண்டாட்டி, வைப் பாட்டிகள் என்று ஏற்பாடு செய்து, குழந்தைக் குட்டிகள் சகிதமாகக் கதை கட்டி, கோயில் திருவிழா என்ற பெயரில் சுரண்டல் தொழிலை நடத்துவதோடு, அதிலும் ஜாதிப் பிளவுகளை ஏற் படுத்தி, உன் கடவுள், என் கடவுள் என்று பேதப்படுத்தி, மக்கள் மத்தியில் மாச்சரியங் களையும், மோதல் போக்கு களையும் உண்டாக்குகிறார் கள் என்றால், இதன் தன்மை என்ன?

வைதிகரும், வைணவரு மான ராஜகோபாலாச்சாரி யாரே (ராஜாஜியே) முதல மைச்சராக இருந்த நிலை யிலே ஒரு உண்மையை ஒப்புக்கொண்டார்.

நம் நாட்டில் மற்றவர்கள் சண்டையைக் காட்டிலும் பக் தர்களின் சண்டையே அதிகம். என் தெய்வம் பெரிதா? உன் தெய்வம் பெரிதா என்ற சண்டைகள்தான் அதிகம் என்று வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டார் (சென்னை தமிழிசைச் சங்கத் திறப்பு விழாவில், 15.4.1953).

விழுப்புரம் பல்லவராய புரத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் பகுதிகளில் சாமி ஊர்வலம் வரவேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.

மகேசன் விஷயத்தில் மாவட்ட ஆட்சியர்தான் தலை யிடவேண்டுமோ!

என்ன, மகேசனோ, மண் ணாங்கட்டியோ!

மயிலாடன்
www.viduthalai.com