வெள்ளி, 15 அக்டோபர், 2010

அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள அத்தனைக் கோயில்களையும் அகற்றுக!


                      உச்சநீதி மன்றத்தின் வரவேற்கத்தக்க ஆணை




நடைபாதைக் கோயில்கள், பொது இடங்களில் அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ள அனைத்து மத வழிபாட்டுக் கோயில்களையும், சின்னங்களையும் உடனடியாக அகற்றுமாறு உச்சநீதிமன்றம் செப் 14 அன்று ஆணையிட்டுள்ளது.



நாடெங்கும் அனுமதி பெறாது போக்குவரத்துக்கு இடை யூறாகவும், பலருடைய தனி வருவாய்க்கு வழி செய்யவும் பல நூற்றுக்கணக்கான நடைபாதைக் கோயில்களைக் கட்டியிருக் கிறார்கள்;



இதேபோல வேறு மத வழிபாட்டுச் சின்னங்களும்கூட தோன்றியுள்ளன; (இவை விகிதாச்சாரத்தில் மிகவும் குறைவு தான்) இவைகளை அகற்றவேண்டும் - இது பொதுமக்களின் வசதிக்கு மிகப்பெரிய இடையூறு என்பதை பலமுறை சுட்டிக் காட்டப்பட்டது பகுத்தறிவாளர்களால், திராவிடர் கழகத்தவர்களால், மதச்சார்பின்மையாளர்களால் (Secularists).



அனுமதியின்றி இந்தத் திடீர்க் கோயில்கள் அரசு அலுவலக வளாகங்களில், அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கோயில்கள் கட்டப்படுகின்றன. பல மதத்தவர் மத நம்பிக்கையற்ற பகுத்தறிவாளர்கள் உள்ள பொது அரசுப் பணிமனைகளில், பொது இடங்களில் பலர் வேண்டுமென்றே மற்ற மதத்தவர்களை வம்புக்கு இழுப்பதற்கோ அல்லது மதவெறியைப் பரப்புவதற்கோ உள்நோக்கத்துடன் கட்டப்பட்டவைகளும் உண்டு.



இதை எதிர்த்து நாகர்கோவில் முதல் சென்னை, திருத்தணி எல்லைவரை உள்ள பல ஊர்களில் சென்னை மாநகரம் உள்பட - கட்டப்படும் கோயில்களை, வழிபாட்டு நிலையங்களை (தனியா ருக்கு வருவாய் மூலங்களும் ஆகும்) எதிர்த்து திராவிடர் கழகத்தவர்கள் போட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளன.



தஞ்சை, திருச்சி போன்ற பெருநகரங்களில் - தஞ்சை, திருச்சி மருத்துவக் கல்லூரி வளாகங்களில் கட்டப்பட்ட கோயில்களை இடிக்க நீதிமன்றத் தீர்ப்புகளுக்குப் பின்னரும்கூட, ஆங்காங்குள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களோ, மற்ற அதிகாரிகளோ, அவைகளை இடித்து அப்புறப்படுத்துவதை ஏனோ ஏதேதோ சாக்குக் கூறி காலந்தாழ்த்தி வருகின்றனர்!



உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, ஆணைக்குப் பிறகும் காலந்தாழ்த்தக்கூடாது.



திருச்சி, மதுரை போன்ற பல மாவட்டங்களில் உள்ளவற்றை அகற்ற மதுரை உயர்நீதிமன்றத்தால் சில ஆண்டுகளுக்குமுன் தீர்ப்பு வழங்கப்பட்டு, அகற்ற ஆணை பிறப்பித்த நிலையில்கூட, சில ஊர்களில் இடித்தனர்; பிறகு மெத்தனமாகக் கிடப்பில் போடப்பட்டு-விட்டது.



இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த முற்போக்குக் கருத்துள்ள தீர்ப்பு, காலத்தால் கிடைத்த அருமையான பாராட்டி வரவேற்கவேண்டிய தீர்ப்பு!



இத்தீர்ப்பினை உடனடியாக அமல்படுத்தத் தவறிய மாநிலங்களின் அரசு தலைமைச் செயலாளர்களை நேரில் வருமாறு அழைப்போம்; விளக்கம் கேட்போம் என்று கூறியுள்ளது மிகச் சரியானதே!



தீர்ப்பை அமல்படுத்த, வற்புறுத்திட காலக் கெடுவுடன்கூடிய (Time Bound) அகற்றல் நடவடிக்கைக்குச் சரியான ஆணை மிகவும் தேவை.



உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்-பட்டுள்ள சில தகவல்கள் எவரையும் வியப்பில் ஆழ்த்தக் கூடியதாக உள்ளன.



தமிழ்நாட்டில் - பெரியார் பிறந்த மண்ணில் - பகுத்தறிவாளர் ஆளும் இம்மாநிலத்தில் உள்ள நடைபாதைக் கோயில்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாம்!



கிழக்கே உள்ள அருணாச்சல பிரதேசத்தை உச்சநீதிமன்றம் பாராட்டி உள்ளது. அங்குதான் அனுமதியற்ற ஒரு வழிபாட்டு நிலையம்கூட இல்லை என்பதற்காக!



மத்திய அரசு, மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் (பாண்டிச்சேரி, டில்லி போன்றவைகள்) இத்தகைய அனுமதியற்று எழுப்பப்படும் வழிபாட்டு நிலையங்களை அகற்றிட, ஒரு கொள்கை திட்டத்தை உருவாக்கவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.



எனவே, தமிழ்நாடு அரசு இதில் உடனடியாக அக்கறை செலுத்தி, தயவு தாட்சண்யமின்றி இடித்து அகற்றிடவேண்டும்.



ஆக்கிரமிப்புக் கட்டடங்களை அகற்றிட முன்வருதல் போலவே, அரசு, மாநகராட்சி, காவல்துறை உதவியுடன் செய்யவேண்டும்.



திராவிடர் கழகத்தவர்கள், பகுத்தறிவாளர்-கள் ஆங்காங்கே உடனடியாக இதனைச் சுட்டிக்காட்டி, உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமலாக்க உதவிகரமாக இருக்கவேண்டும்; இருப்பார்கள் என்பது உறுதி.



தமிழக அரசின் தலைமைச் செயலாளரும் இதில் கவனம் செலுத்திட முன்வரவேண்டும்.



அவசரம் - அவசியம்.



- கி.வீரமணி, ஆசிரியர்

பெரியாரிடமா சோதிடம்?

சோதிடம் என்பது பொய்- அது ஒரு ஏமாற்று வித்தை என்று தந்தை பெரியார் அவர்கள் எவ்வளவோ எடுத்துச் சொன்னதோடு மட்டுமல்லாமல், தனது வாழ்க்கை மூலமாகவே சோதிடத்தின் முகமூடியைக் கிழித்தெறிந்து காட்டி விட்டார்கள்.



அய்யா அவர்களது பெற்றோர்கள் அய்யா அவர்களுடைய ஜாதகத்தைக் கணித்து வைத்தி ருந்தார்கள். அதில் தந்தை பெரியார் அவர் களுக்கு ஆயுள்காலம் 60 வருடம் என்று எழுதப்பட் டிருந்தது. ஆனால், அதற்கு மேலும் 35 ஆண்டுகள் வாழ்ந்து காட்டி, இந்த சோதிடப் பித்தலாட் டத்தைத் தோலுரித்துக் காட்டிவிட்டரே!

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

மதவாதிகளுக்கு மூக்குடைப்பு!

                                                            மணிமகன்    


அரசுகள் அமைந்த காலத்தில் இருந்து மதங்களின் தலையீடு இருந்தே வந்துள்ளது. மதங்களுக்குள் சண்டைகள் ஏற்பட்டபோதும், மதவாதிகள் ஆட்சியாளர்களாக இருந்தபோதும் நாடுகளுக்குள் மோதல்களும் உண்டாயின. மதமோதல்களால் இரு நாடுகளுக்கு இடையே சண்டை மூண்டதும் உண்டு. மண்பிடிக்கும் போர்களால் ஏற்பட்ட பேரழிவைவிட மதச் சண்டைகளால் உருவான போர்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளே அதிகம் என்று வரலாறு பாடம் சொல்கிறது.



மக்களின் வாழ்க்கைக்குப் பாடுபட உருவான அரசு என்னும் அமைப்பில், மதம் வந்து புகுந்துகொண்டதால் ஏற்பட்டவை இழப்புகளே அன்றி ஏற்பவை எதுவும் இல்லை. பிரஞ்சுப்-புரட்சிக்குப்பின் ஜனநாயகம் என்ற கருத்தியலின் மீதும், ருஷ்யப்புரட்சிக்குப் பின் சோசலிசம் குறித்த விழிப்புணர்வினாலும் 19 ஆம் நூற்றாண்டுக்குப் பின் மக்களிடம் அரசையும், மததையும் பிரித்துப் பார்க்கும் எண்ணம் உருவானது என்று சொல்லலாம்.பின்னர் மீண்டும் ஹிட்லரின் கொடுங்கோன்மையை ஆரிய இன வல்லாண்மையின் பெயரில் உலகம் கண்டது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஜனநாயகமும், சோசலிசமும் அரசுக்-கான கருத்தியலாக வடிவம் கொண்டன. ஆனாலும், மதத்தின் தலையீடு அரசியலில் இருந்தே வந்துள்ளது.



இன்றளவும் மத ஆதிக்கம் பல்வேறு நாடுகளின் அரசுகளில் உள்ளதைப் பார்த்துக் கொண்டுதான் உள்ளோம்.வளகுடாப் போர்கள், ஈராக் மீதான அமெரிக்காவின் படையெடுப்பு, ஆப்கானிஸ்தான், பின்லேடன் விவகாரங்-களுக்குள்ளும் மதங்களின் பங்களிப்பு இல்லாமல் இல்லை.



இத்தகைய சூழலில் அரசுகளில் மதங்களின் தலையீடு கூடாது என்ற முழக்கத்தை மதநம்பிக்-கையற்றவர்கள், நாத்திகர்கள், மனிதநேயர்கள் பல ஆண்டுகளாக எழுப்பி வருகிறார்கள். உண்-மையான மதச்சார்பற்ற அரசுகளே எல்லா மக்களையும் சமமாகப் பாவிக்கும் எண்ணம் கொண்டவையாக இருக்க முடியும். எந்த மதத்தையும் சாராதவரே எல்லா மதத்தவரையும் மனிதனாகப் பார்ப்பவராக இருப்பார். இப்படி ஒருவராக அண்மையில் ஆஸ்திரேலியாவின் பிரதமராகப் பொறுப்-பேற்றார் ஜூலியா கில்லார்ட்.



ஆஸ்திரேலியாவை ஆளும் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஜூலியா கில்லார்ட், ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். ஓர் ஆணும், ஒரு பெண்ணும் சேர்ந்து வாழும் வாழ்க்கையில் திருமணம் என்ற பந்தம் தேவையற்றது என்ற எண்ணம் கொண்ட இவர், திருமணம் செய்து-கொள்ளாமல் தன் வாழ்க்கைத் துணைவருடன் வாழ்ந்து வருகிறார். அதுமட்டுமல்ல, ஆஸ்திரேலியா-வின் கடந்த 106 ஆண்டுகால ஜனநாயக அரசியல் வரலாற்றில், முதன்முதலாக வெளிப்படையாக தன்னை ஒரு நாத்திகவாதி என்று பிரகடனப்படுத்திய பிரதமரும் ஜூலியா கில்லார்ட்தான்.பொறுப்பார்களா மதவாதிகள்; தங்களின் தாக்குதல்களைத் தொடங்கினர்.



பிரதமராகப் பதவியேற்ற ஆறு வாரங்களுக்குள், இன்னும் மூன்று மாதம் தள்ளி நடத்தவேண்டிய தேர்தலை உடனடியாக நடத்த ஜூலியா கில்லார்ட் உத்தரவிட்டார். ஜூலியா பிரதமரின் அரசு மாளிகையில் குடியேறவும் இல்லை. நான் தலைமையேற்று நடத்தாத தேர்தலில், கட்சியின் முடிவால் பிரதமராகப் பொறுப்-பேற்றேன். இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானால், அரசு மாளிகையில் குடியேறுவேன் என்று கூறிவிட்டார்.



ஒரு அநாகரிகப் பேர்வழி, ஜூலியா மீது முட்டைகளைக் கூட அடித்தான். இவற்றையெல்லாம் எதிர்கொண்டு புயல் வேகத்தில் ஆஸ்திரேலியாவைச் சுற்றிப் பிரச்சாரம் செய்தார். இவரது பிரச்சாரம் சூடுபிடித்த சூழலில் மேற்கு ஆஸ்திரேலியத் தலைநகர், பெர்த்தில் உள்ள கத்தோலிக்க மதத்தின் ஆர்ச் பிஷப் பேர்ரி ஹிக்கி என்பவர் நாத்திகருக்கு வாக்களிப்பதா? என விஷம் கக்கினார்.







பேர்ரி ஹிக்கி வெளியிட்ட அறிக்கையில், நாத்திகம் தலைதூக்குவது நாட்டிற்கு நல்லதல்ல. நாத்திகர்கள் ஆண்ட கிழக்கு அய்ரோப்பிய நாடுகளில், என்ன நடந்தது என்பதை நாம் கண்கூடாகக் கண்டோம். அரசியலில் மதச்சார்பின்மை வளர்வது விரும்பத்தகாத விளைவுகளை உண்டாக்கும். எனவே, நாத்திக நம்பிக்கை கொண்ட ஜூலியா கில்லார்ட்டிற்கு, எந்த மதத்தையும் சாராத ஜூலியா கில்லாட்டிற்கு வாக்களித்தால் அவர்கள் தேவாலயங்களைப் புறந்தள்ளுவார்கள், பாரம்பரிய கிறித்துவ மரபிலிருந்து வழுவுவார்கள். அது நாட்டிற்கும், மக்களுக்கும் நல்லதல்ல என்று பதறினார். அதோடு நிற்காமல், எதிர்க்கட்சித் தலைவரான, டோனி அபட், ஆழ்ந்த மத நம்பிக்கை உடைய கிறித்துவர். ஆகவே, அவருக்கு வாக்களிப்பதே நல்லது என்ற கருத்துப்பட தனது அறிவிப்பை வெளியிட்டார்.மதத் தலைவரின் கருத்து இது என்று மக்கள் யாரும் வாய்மூடி மௌனமாய் இருக்கவில்லை. அரசியலில் மதகுரு எப்படி தலையிடலாம்? என மக்கள் கொதித்து-விட்டனர். தொலைக்காட்சி, வானொலி, இணையதளம் என எல்லா ஊடகங்களிலும் மக்கள் பிஷப்பின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.



இந்தப் பிரச்சினை குறித்துக் கருத்துத் தெரிவித்தவர்களில் பிஷப்பின் கருத்துக்கு எதிராகக் கருத்துச் சொன்னவர்கள் 80 சதவீதம் பேர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் மிக நுணுக்கமாகவும், நேர்படவும் கருத்துச்சொன்னவர்கள் அதிகம்.பிக்டன் என்ற பகுதியைச் சேர்ந்த மஹ்மூத் என்பவர், இவரைப் போன்றவர்களிடமிருந்து (பிஷப் பேர்ரி ஹிக்கி) இதற்குமேல் எதிர்பார்க்க முடியாது. அவருடைய உடையைப் பாருங்களேன். ஒரு ஆண் பேயைப் போல இல்லை? மவுடீகங்களும், மூடப் பழக்கங்களும், முட்டாள்தனங்களும் அரசாங்கங்களை அண்டத் துடிப்பதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது, என்கிறார். பெர்த் பகுதியைச் சேர்ந்த சாண்ட்ரா என்பவரது கருத்து இன்னும் ஆழமானது. அவர் சொல்கிறார், ஹாய் மிஸ்டர் ஹிக்கி! அண்மையில் போர்ச்சுகல், கிரீஸ், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதே, அதன் காரணம் என்ன தெரியுமா? அந்த நாடுகளில் எல்லாம் அரசிலும், அரசியலிலும் மதக் கிறுக்கு பிடித்த பைத்தியக்காரர்கள் இடைவிடாது தலையிட்டு வந்தார்கள். நாட்டை நட்டப் பாதைக்கு வழி நடத்தினார்கள்.



வருமான வரி செலுத்தத் தேவையில்லாத சொர்க்க நிலையில் இருந்து கொண்டு வரி, செலுத்துகின்ற நாங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் அல்லது வாக்களிக்கக் கூடாது என்று புராணக் குப்பைகளை நம்பிக் கொண்டு இருக்கக் கூடிய பாதிரிகள் யாரும் எங்களுக்குக் கூற வேண்டியதில்லை. பெரும்பாலான மக்கள், தாங்கள் எப்படி மற்றவரால் நடத்தப்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களோ, அதேபோல்-தான் மற்றவரையும் நடத்தவேண்டும் என்ற எளிமையான வாழ்வியலோடுதான் வாழ்-கிறார்கள். அப்படி வாழும் மக்களுக்கு, மதவாதி, பகுத்தறிவுவாதி, நாத்திக வாதி என்ற எந்த முத்திரையும் தேவையில்லை, என்கிறார்.



கத்தோலிக்க திருச்சபை அரசுக்கு வரி செலுத்-தாதது ஏன்? இவர்கள் நடத்தும் பள்ளிகளுக்கு அரசு மானியம் அளிப்பது சரியா? என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.



உலகிலுள்ள பல நாடுகளில், அந்நாட்டுப் பழங்குடியினரது பண்பாட்டை, மொழியைச் சிதைத்து பெருங்கொடுமை செய்தது மதங்கள்-தான். மதங்களையோ, கடவுளையோ நம்பாத காரணத்தாலேயே நான் ஜூலியாவிற்கு வாக்களிக்கப் போகிறேன் என்று மெஸ்ஸ் 303 என்பவர் கூறியிருக்கிறார், நாத்திகத்திற்கு, மதங்கள்(!) கூறுவதைப் போன்ற ஒழுக்கக் கோட்பாடுகள் இல்லை என்று யார் சொன்னது? நாத்திகம் என்பது ஒரு கிளப்போ, நிறுவனமோ அல்லது ஒரு சிறு கூட்டமோ அல்ல. நாத்திகம் என்பது ஒருவருடைய தனிப்பட்ட கோட்பாடு. மதங்கள் ஊட்டுகிற வெறுப்பையும், மூட நம்பிக்கை-களையும் தவிர்த்து வாழும் நாத்திகர்கள் அனைவரும் சராசரிக்கு அதிகமான நிலையிலுள்ள ஒழுக்கக் கோட்பாடுகளைப் பேணுகிறார்கள். நான் ஒரு கிறித்துவன்.



கிறித்துவ நம்பிக்கைக் கொண்ட பிரதமர்கள் எல்லாம் வலதுசாரி, பழைமைவாதிகளாகவே இருக்கிறார்கள். இயேசு நாதர், மதமும் அரசும் தனித்தனியாகத்தான் இருக்கவேண்டும் என்று சொன்னார். ஆனால், அவரைக் கொன்றவர்கள் அரசையும், மதத்தையும் பிரித்துப் பார்க்கவில்லை. ஆகவே, மத நம்பிக்கை கொண்டவரைவிட, மதத்தையும், அரசையும் பிரித்துப் பார்க்கும் நாத்திகருக்கு வாக்களிப்பதுதான் சிறந்தது, என்று பெர்த்பகுதியைச்சேர்ந்த ஜான் என்பவர் கூறுகிறார். அரசியலில் மதத்திற்கு இடமில்லை.



பாதிரிமார்கள் அரசியலின் பக்கம் தலை வைத்துப்படுக்கவே கூடாது!, ஒவ்வொரு மனிதனும் ஏதாவதொரு மதத்தை நம்பித்தான் ஆகவேண்டுமா என்ன? மதங்களை நம்புவோர் அவர்களுடைய நம்பிக்கைகளை அவர்களுக்-குள்ளேயே வைத்துக் கொள்ளட்டும், முட்டாள்-தனமான மதங்களும், மதம் சார்ந்த அரசியல் கொள்கைகளும் உலகில் நடத்தி உள்ள போர்கள் ஏராளம். ஜூலியா கிறித்துவராக இல்லாவிட்டால் யாருக்கென்ன நட்டம்? என்ற கருத்துகளும் பலரால் சொல்லப்பட்டுள்ளன.



ஆஸ்திரேலியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு நாத்திகம் குறித்தும்,மத எதிர்ப்புக்-கருத்துகளும் தேர்தலில் முக்கியப் பிரச்சினையாக முன்னிறுத்தப்பட்டன. ஆனால், மதவாதிகள் எதிர்-பார்த்தது நடக்கவில்லை.அரசையும் மதத்தையும் பிரித்துப் பார்க்கும் பக்குவத்தை மக்கள் அங்கே பெற்றுவிட்டனர் என்பதையே இந்தக் கருத்துகள் எதிரொலிக்கின்றன. நாத்திகர்-கள்-தான் நடுநிலையாளர்கள் என்கிற கருத்து மேலோங்கி வருவதையே இது காட்டுகிறது.



தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்-பட்டுக்கொண்டுள்ள நிலையில் ஜூலியா கில்லார்டின் தொழிலாளர் கட்சிக்கு அறுதிப்-பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், சரிபகுதி வாக்குகளைப் பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. வாக்கு சதவீதத்திலும் மற்ற கட்சிகளைவிட முன்னிலை-யில் உள்ளது.



தன்னை நாத்திகர் என்று அறிவித்துக் கொண்ட ஒருவருக்கு மக்கள் பெருமளவு வாக்களித்-துள்ளார்கள். அவர்கள் தங்களை ஆள்பவர் அரசை நடத்தத்தகுதி உள்ளவரா என்று-தான் பார்த்துள்ளார்களே தவிர, அவர் மதவாதியா, நாத்திகரா என்றெல்லாம் பார்க்க-வில்லை. மதம் சார்ந்திருப்பதும், மதத்தை சாராமல் இருப்பதும் ஒருவரது தனிப்பட்ட உரிமை. அதனை அரசியலில் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற கருத்தை ஆஸ்திரேலியா தேர்தல் எடுத்துக் காட்டியிருக்கிறது.



தவிரவும், மதவாதிகள் அரசியலில் நுழைவதை நாகரீக சமுதாயம் விரும்பவில்லை என்பதையும் இந்த முடிவுகள் உணர்த்துகின்றன. உலக அரசியலின் பொது அரங்கில் மதம் சாராத நாத்திகர்களின் மதிப்பும், மரியாதையும் மென்மேலும் உயர்ந்து வருவதை உலகம் உற்றுநோக்கத் தொடங்கி-விட்டது. மதங்களின் ஆதிக்கத்தை விடுத்து, மனித-நேயத்தை முன்னிறுத்தவேண்டிய அவசியத்தை எஞ்சிய நாடுகளும்,உலகளாவிய அரசியல்வாதி-களும் உணரவேண்டிய தருணம் இதுதான்.



                                                              
                                                   நன்றி-உண்மை

                                                                                                                       

பிள்ளையாருக்கு 15 மனைவிகளாம்!



பிள்ளையார்பற்றி கதைகள் ஏராளம் உண்டு. பலவற்றிலும் - எல்லாம் கட்டுக்கதை புராணங்கள் தானே - தமிழ்நாட்டில் அது இறக்குமதி கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகுதானே!

அபிதான சிந்தாமணி 1910இல் வெளிவந்த அந்தக்கால தமிழ் கலைக்களஞ்சியம் - என்சைக்ளோ பீடியா!



அதில் பிள்ளையாருக்கு 15 மனைவிகள் உண்டு என்று சுட்டிக்காட்டப்பட்டு இருக்கின்றன!

1. சித்தி என்ற மனைவி

2. புத்தி என்ற மனைவி

(சித்தி புத்தி விநாயகர் என்றால், இரண்டு மனைவிமார்களையும் இணைத்ததுபோலும்!)

3. மோதை

4. பிரமோதை

5. சுமகை

6. சுந்தரி

7. மனோரமை

8. மங்கலை

9. கேசினி

10. காந்தை

11. சாருகாசை

12. சுமத்திமை

13. நந்தினி

14. காமதை

15. வல்லபை

முதலியவரை மணந்தனர்.

பக்கம் 1751, விநாயகர் தலைப்பு

பக்தர்களே, பிள்ளையார்தான் வல்லபை கணபதி வரலாறு எவ்வளவு ஆபாசம் - சிதம்பரத்திலும், மத்தூரிலும் இந்த கணபதி உள்ளது.

(திருவல்லிக்கேணி கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து, 18.9.2010).

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

மறுபிறப்பா?





சைலர்ட் (CYLERT) என்ற வணிகப் பெயருள்ள மருந்து ஒன்று விலங்குகளின் கற்கும் திறன்களை மேம்படுத்துவதாக கூறப்படுகிறது. இதை உருவாக்கி உள்ளவர்கள் அய்க்கிய அமெரிக் காவைச் சேர்ந்த அபட் ஆய்வகத் தார் (லேபரட்டரீஸ்). நினைவுத் திறனுக்கு ஆர்என்ஏ ஒரு முக்கிய பங்கு வகிப்பதாக அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மக் னீசியம் பெமோலைனின் செயல் பாட்டால் மூளையின் நரம்பணுக் களில் ஆர்என்ஏ அதிக வேகமாக உருவாக்கப்படுகிறது. இந்த அதி கரித்த வேகமே, இம்மருந்தால் நினைவுத்திறன் அதிகரிப்பதற்கு காரணம் என கருதுகிறார் டாக்டர் கிளாஸ்கி .

மறுபிறவி பற்றி ஆய்வு நடத்தும் நம்மூர்க்காரர்களுக்கு இந்த செய்தி மிகுந்த உற்சாகத்தை அளிக்கக் கூடும். நம் பையன் களுக்கும் பெண்களுக்கும் சைலர்ட் கொடுப் பதன் மூலம், அவர்கள் தம் முற்பிறவிகள் பற்றி அதிகமதிகம் நினைவுகூர உதவ முடியும். சைலர்ட்டை கூடுதலாக கொடுப்ப தன்மூலம் பெரியவர்கள்கூட தம் முற்பிறவி நிகழ்ச்சிகளை நினைவு கூரச் செய்ய முடியும்.

மூளை நரம்பணுக்களில் உள்ள ஆர்என்ஏ மூலக்கூறுகள்தான் நினைவுத் திறனின் அடிப்படை ஆகும். என்றால், சாவுக்குப்பின் மூளை சிதைந்த பிறகு நினைவு மட்டும் எப்படி தங்கி இருக்க முடியும்? அப்படியானால் முற் பிறவிகளின் நினைவுகள் என அடிக்கடி கூறப்படும் கதை களுக்கு இனி நாம் என்ன மதிப்பு தர முடியும்?

மூன்று ஆண்டு எட்டு மாதம் வயதான சிறுபெண் ஆலிவ் சாமலதா ரஞ்சிபிரேமா, தன் முற்பிறவியில் தனக்கு பெற்றோ ராக இருந்தவர்களின் வீட்டை சுட்டிக் காட்டியதும் அவளது இப்பிறவிப் பெற்றோருக்கு முதலில் பிரமிப்பே ஏற்பட்டது. அந்த வீட்டில்தான், தன் தாய் தந்தையர் வசித்தனர் என்று அவர்களிடம் அவள் கூறினாள். இன்னொரு நாள் ஒரு பெண்ணை சுட்டிக் காட்டி, தன் முந்திய பிறவியில், தான் அவளைப் போல்தான் இருந்ததாக தெரிவித்தாள். (த.சன்).

உள்ளூரைச் சேர்ந்த ஒரு சிறுமி, தேகிவாலா விலங்குக் காட்சி சாலைகளில் உள்ள விலங்குகளில் ஒன்றை சுட்டிக் காட்டி தன் முந்திய பிறவியில், தான் அதைப் போலவே இருந்த தாகக் கூறும் சுவையான கதையைக் கேட்க இன்னும் நாம் காத்துக் கொண்டிருக் கிறோம்! தன் முற்பிறவியில், தான் ஒரு விலங்காக இருந்த தாக தன் நினைவுகளில் இருந்து கூர்ந்து கூற முடிகிற ஒரே ஒரு குழந்தையைக்கூட இன்னும் நம் மறுபிறப்பு ஆராய்ச்சிக்காரர்கள் எவரும் சந்திக்க முடியாதது ஏனோ?

மறுபிறப்பு பற்றி விளக் கங்கள் அளிப்போரிடம் நாம் கேட்பது என்னவென்றால், ஆலிவும் முன்பிறப்பில் அவள் யாரைப் போல் இருந்தாளோ அந்த மற்ற பெண்ணும் ஒரே பிறவியில் பிறக்க முடிந்தது எப்படி? அப்படியானால் ஒரே ஆளே, அவர் இறந்தபின் இரட் டைப் பிறவிகளாய் அன்றி இரண்டு வெவ்வேறு ஆள் களாக திரும்பப் பிறப்பது சாத் தியமா?

டாக்டர் ஏ.டி.கோவூர்

நாஸ்திகத்தின் நன்மை

ம.சிங்காரவேலு


நாஸ்திகத்தின் நன்மையைச் சற்று நோக்குவோம். இது விஷயமாகப் பிராட்லா என்பார் (Humanity’s gain from unbelief) என்ற நூலில், நாஸ்திகத்தில் உலகமடைந்து வரும் நன்மைகளை விளக்கியுள்ளார். இங்கு அதனைச் சுருங்க உரைப்போம்.

1. அடிமைத்தனம், (Slavery) அதாவது மக்களை விலங்குகளைப்போல் விற்கவும், வாங்கவுமான ஸ்தாபனம் நாஸ்திகத்தால் ஒழிக்கப்பட்டது. எல்லா மதங்களும் அதனை ஆதரித்தும் பாராமுகமாய் இருந்தும் வந்தன.

2. நோய்கள் (Disease) பேய் பிசாசுகளால் (Evil Spirit) உண்டாவதாக நினைத்துவந்த மூடநம்பிக்கை மிகுதியாக உலகம் முழுமையும் ஒழிந்தது. இந்த மூடநம்பிக்கையை மதங்கள் வளர்த்து வந்தன.

3. தெய்வமாடுதல், குறி சொல்லுதல், ஜோசியம் முதலிய பித்து வழக்கங்கள் நாஸ்திகத்தால் குறைவுற்றன.

4. பிசாசு பிடித்தவர்களென்று மந்திரக் காரர்களையும் பைத்தியக்காரர்களையும் கொன்று இம்சிக்கும் பழக்கத்தை நிறுத்தியது நாஸ்திகமே.

5. அபிப்பிராய வித்தியாசத்தால் நேரிடும் கொலைகள் குறைந்து வருவதும் நாஸ் திகத்தால்தான்.

6. பஞ்சம், தரித்திரம், வறுமை முதலிய கஷ்டங்கள் கடவுள் கோபத்தால் உண்டாவதாக எண்ணிவந்த மூடநம்பிக்கை ஒழிந்ததும் நாஸ்திகத்தால்தான்.

7. கொடுங்கோல் மன்னர் ஆணவத்தை அடக்கி வருவதும் நாஸ்திகமே.

8. சுதந்திரம், சமத்துவம், முதலிய தாராள நோக்கங்கள் உலகில் பரவி வருதல் நாஸ்திகத்தால். (Question Not) கேட்காதே என்ற ஆணவத்தை எதிர்த்து விசாரிக்கும் மனப்பான்மையை வளர்ப்பதும் நாஸ்திகமே.

9. அக்கிரமம், அநியாயம், அறியாமை, தயை தாட்சண்யமின்றி ஒழிக்கப்பட்டு வருவதும் நாஸ்திகத்தால் தான்.

10. கோடானுகோடி பசித்து வருந்திக் கிடக்கும் மக்களுக்கு மூடப்பழக்கங்களி லிருந்து எழுங்கள். ஊக்கத்தையும், தைரி யத்தையும் கைவிடாதீர்கள். உலகிற்கும், உங்களுக்கும் பொருளாதாரத் தாழ்வால் வந்திருக்கின்றது கேடு. அதனைப் போக்கி உலக முழுமையும் களஞ்சியமாகும் கல்வி யும், சாந்தமும், சமாதானமும், நிலவச் செய் யுங்கள் என்று கூவி அழைப்பதும் நாஸ் திகமே.

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

சண்டை!



அனைவரையும் படைத் தவர் கடவுள் என்கின்றனர் அப்படிப் பார்க்கும்பொழுது கடவுள் அனைவருக்கும் தகப்பன் ஆகிறார்.

உண்மையான தகப்ப னார் தன் பிள்ளைகளை வேறுபடுத்திப் பார்ப்பாரா? அப்படிப் பார்த்தால் அவர் யோக்கியமான தகப்பனாகத் தான் மதிக்கப்பட முடியுமா?

நாட்டில் என்ன நடக் கிறது. ஒரு கட்டத்தில் கோயி லுக்குள் தாழ்த்தப்பட்டவர் கள் போகக்கூடாது என்று தடை போட்டார்கள். அதற் காகப் போராட்டம் நடத்தப் பட்டு, அந்த உரிமை கிடைக்கப் பெற்றது.

குறிப்பிட்ட ஜாதியினர் தான் சாமியைத் தொட முடியும், குளிப்பாட்ட முடியும், பூஜை செய்ய முடியும் என்று சுவர் எழுப்பி வைத்தனர்.

அதனை உடைக்க அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்னும் சட்டம் திராவிடர் கழகத்தின் முயற்சியால், தி.மு.க. ஆட்சி யில் இயற்றப்பட்டு, அனைத்து ஜாதியினருக்கும் 69 சத விகித இட ஒதுக்கீடு அடிப் படையில் பயிற்சியும் அளிக் கப்பட்டு, இந்துக் கோயில் கருவறைக்குள் இந்து மதத் தைச் சேர்ந்த எந்த ஜாதி யினரும் அர்ச்சகராக ஆணை பிறப்பிக்கப்படவி ருந்த ஒரு காலகட்டத்தில், அதனையும் எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றுவிட்டனர் பிரம்மாவின் முகத்தில் பிறந்ததாகத் தங்களுக்குத் தாங்களே எழுதி வைத்துக் கொண்ட பார்ப்பனர்கள்.

ஏடுகளில் ஒரு சேதி இன்று வந்தது. பண்ருட்டி வட்டம் பல்லவராயநத்தம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்கு முத்துமாரியம்மன் சாமி ஊர்வலம் செல்லத் தடையாம்.

கோயிலுக்குமுன் வைக் கப்படும் மரத்தால் ஆன முத்துமாரியம்மனை வேண்டு மானால் தாழ்த்தப்பட்டவர்கள் கும்பிட்டுத் தொலையலாமாம். சாமி சிலையில்கூட மற்றவர் களுக்கு உலோகத்தால் ஆனது; தாழ்த்தப்பட்டவர் களுக்கு மரத்தால் ஆனதாம்.

அடேயப்பா, இந்தக் கடவு ளைப்பற்றி எப்படி எப்படியெல் லாம் குலுக்கி மினுக்கி எழுதித் தள்ளியுள்ளார்கள்? அன்பே உருவானவர் காருண்ய மூர்த்தி, சகல உயிர்களையும் படைத்த சக்தி படைத்தவர் உருவமற்றவர் அரூபி என்று ஒரு பக் கத்தில் கிறுக்கி வைத்து விட்டு, இன்னொரு பக்கத் தில், கடவுளுக்கு உருவம் வைத்து பெண்டாட்டி, வைப் பாட்டிகள் என்று ஏற்பாடு செய்து, குழந்தைக் குட்டிகள் சகிதமாகக் கதை கட்டி, கோயில் திருவிழா என்ற பெயரில் சுரண்டல் தொழிலை நடத்துவதோடு, அதிலும் ஜாதிப் பிளவுகளை ஏற் படுத்தி, உன் கடவுள், என் கடவுள் என்று பேதப்படுத்தி, மக்கள் மத்தியில் மாச்சரியங் களையும், மோதல் போக்கு களையும் உண்டாக்குகிறார் கள் என்றால், இதன் தன்மை என்ன?

வைதிகரும், வைணவரு மான ராஜகோபாலாச்சாரி யாரே (ராஜாஜியே) முதல மைச்சராக இருந்த நிலை யிலே ஒரு உண்மையை ஒப்புக்கொண்டார்.

நம் நாட்டில் மற்றவர்கள் சண்டையைக் காட்டிலும் பக் தர்களின் சண்டையே அதிகம். என் தெய்வம் பெரிதா? உன் தெய்வம் பெரிதா என்ற சண்டைகள்தான் அதிகம் என்று வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டார் (சென்னை தமிழிசைச் சங்கத் திறப்பு விழாவில், 15.4.1953).

விழுப்புரம் பல்லவராய புரத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் பகுதிகளில் சாமி ஊர்வலம் வரவேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.

மகேசன் விஷயத்தில் மாவட்ட ஆட்சியர்தான் தலை யிடவேண்டுமோ!

என்ன, மகேசனோ, மண் ணாங்கட்டியோ!

மயிலாடன்
www.viduthalai.com

புதன், 11 ஆகஸ்ட், 2010

எல்லாம் அவன் செயலா? இது எவன் செயல்?



நாகை: திருமருகல் கோவிலில் பல லட்சம் மதிப்புள்ள 3 கடவுள் சிலைகள் கடத்தல்



திருமருகல், ஆக.8- நாகை மாவட்டம், திரு மருகல் ஒன்றியம், திருப்பு களூர் கிராமத்தில் அமைந் துள்ளது அக்னீஸ்வரர் கோயில். இக்கோயிலில் பல்வேறு மாவட்டங் களிலிருந்தும் வெளி மாநிலங்களி லிருந்தும் சில நேரங்களில் வெளி நாட்டினரும் இக்கோ யிலுக்கு வந்து செங்கற் களை வைத்து வாஸ்து பூஜை என்ற பெயரில் பூசைகள் நடத்தி அந்த செங்கற்களை சாக்கில் வைத்து கட்டி எடுத்துச் செல்வது வழக்கமாம்.

மேலும் இக்கோயிலில் நேற்று (7.8.2010) மகா பிரதோஷம் என்ற பெய ரில் பூஜைகள் நடந்த தாம். இந் நிலையில் இக்கோயி லில் கடந்த 2003 ஆம் ஆண்டு கோயில் வளாகத் திலேயே கண் டெடுக்கப் பட்ட 27 அய்ம் பொன் சிலைகள் இரும்புக் கம்பி வேலிக்குள் அடைக் கப்பட்டு கோயில் நிரு வாகத்தினரால் பாது காக்கப்பட்டு வருகிறது.

இச்சிலைகளில் மூன்று சிலைகள் மட்டும் திடீ ரென காணாமல் போய் விட்டதாக கோயில் நிரு வாகம் கூறுகிறது. இந்தச் சிலைகளின் மதிப்பு பல லட்சம் இருக்குமென கூறப்படுகிறது. இதுபற்றி இப்பகுதியில் பொது மக்கள் கூறும் போது இக்கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பாக வைத்திருக்கும் இடம் இரும்பு கம்பிகளால் தடுக்கப்பட்டு இரண்டு பூட்டுகள் கோயில் நிரு வாகத்தால் போடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வரு கிறது. இந்த கோயில் பூட்டு கள் உடைக்கப்பட்டோ, அல்லது சேதப்படுத்தப் பட்டோ இல்லையாம். ஆனால் இரண்டு பூட்டு களும் எவ்வித சேதாரமும் இல்லாமல் பூட்டப்பட்ட நிலையி லேயே உள்ளதாம். எனவே இந்த சாமி சிலை கள் வெளியூரில் இருந்து எவரேனும் எடுத் திருக்க முடியாது என்றும், கோ யில் நிருவாகமே இதனை செய்துவிட்டு திருட்டுப் போனதாக அறிவிக்கிறது எனவும் பொது மக்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக திட்டச்சேரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவனின்றி ஓரணுவும் அசையாதே அப்படி யானால் இந்த 3 பகவான் களையும் கடத்தியது எவன் செயல்?

புதன், 9 ஜூன், 2010

உலகில் நாத்திகர்களின் எண்ணிக்கை பெருகுகிறது

வியட்நாமில் நாத்திகர்கள் 81 விழுக்காடு

சென்னை, ஜூன் 9_ உலகில் கடவுள் மறுப்பா-ளர்-களின் எண்ணிக்கை வளர்ந்து வருகிறது என்று அறிவியல் தகவல்கள் கூறுகின்றன.

670 கோடி மக்கள் வாழும் இவ்வுலகில் 50 முதல் 75 கோடி மக்கள்வரை கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக உள்ளனர். கடந்த பத்தாண்டு காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளின் புள்ளி விவரங்களிலிருந்து தொகுக்கப்பட்டது இந்த மதிப்பீடு.

இந்தப் போக்கு எதைக்காட்டுகிறது? அமெரிக்கா உள்ளிட்ட பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகளில் நாத்திகமும் வளர்ந்து வருவதாக கலிபோர்னியா பிட்சர் கல்லூரியின் பேராசிரியர் பில் ஜுகர்மேன் கூறுகிறார். வளர்ச்சி பெறாமல் பின் தங்கி உள்ள நாடுகளில் மதம் இன்னும் மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதாக இருப்ப-தால், உலக அளவில் நாத்திகம் வளருவது என்ற இந்த போக்கு பின்னடைவையே பெற்றுள்ளது எனக் கூறலாம். இந்த நாடுகளில்தான் மக்கள் தொகை அதிகமாக இருப்பதுடன், வளர்ந்த நாடுகளை விட மக்கள் தொகைப் பெருக்கமும் இந்த நாடுகளில்தான் விரைவாகவும் உள்ளது என்பதே இதன் காரணம்.

நாத்திகர்களும் (Atheists), கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றிய கருத்து அற்றவர்-களும் (Agnostics) அதிகமாக வாழும் 10 நாடுகள்:

1. ஸ்வீடன் 46_85 விழுக்காடு

2. வியட்நாம் 81 விழுக்காடு

3. டென்மார்க் 43_80 விழுக்காடு

4. நார்வே 31_72 விழுக்காடு

5. ஜப்பான் 64_65 விழுக்காடு

6. செக் குடியரசு 54_61 விழுக்காடு

7. பின்லாந்து 26_80 விழுக்காடு

8. பிரான்ஸ் 43_54 விழுக்காடு

9. தென்கொரியா 30_-52 விழுக்காடு

10. எஸ்டோனியா 49 விழுக்காடு

பல காரணங்களை முன்னிட்டு இந்த புள்ளி விவரங்களை மிகச் சிறந்த மதிப்பீடுகள் மட்டுமே எனக் கூறலாம். மேற்கு அய்ரோப்பாவின் வளர்ச்சி பெற்ற நாடுகள், வட அமெரிக்கா மற்றும் சில நாடு-களைத் தவிர வேறு நாடுகளில் பெரும் அள-விலான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. கேட்கப்படும் கேள்விகளுக்கு நேரடியாக மக்கள் பதில் அளிக்கத் தயாராக இருப்பதில்லை. சில நேரங்களில் பதில் அளிக்கவும் மறுக்கின்றனர் என்றும் கூறலாம். கடவுள் என்பதில் முழுமை-யான நம்பிக்கை இல்லை (absolutely not believe in god) என்றோ, நான் மதத்தில் இல்லை (I am not into religion) என்று அவர்கள் பல்வேறு சொற்-றொடர்களைப் பயன்படுத்துகின்றனர். என்றாலும் இந்தப் புள்ளிவிவரங்கள் ஏறக்குறைய ஒரு சரியான மதிப்பீட்டை அளிக்கின்றன.

நாத்திகர்கள் வழக்கமாகவே இளைஞர்களாக, ஆண்களாக, அதிகம் படித்தவர்களாக, சரியான தேர்வை ஆதரிப்பவர்களாக, பெண்உரிமை ஆதர-வாளர்களாக, உடலை வருத்தும் தண்டனைகள் அளிப்பதற்கு எதிரானவர்களாக இருக்கின்றனர் என்பதை மக்கள் தொகை இயல் ஆய்வுகள் காட்டுகின்றன.

இந்தியர்களில் மூன்று விழுக்காட்டிற்கும் குறைவானவர்களே கடவுள் நம்பிக்கை அற்றவர்-களாக உள்ளனர் என்று 2004 இல் மேற்கொள்ளப்-பட்ட பி.பி.சி. ஆய்வு ஒன்று தெரிவிப்பதாகவும், இந்தி-யர்களில் 5 விழுக்காடு கடவுள் நம்பிக்கை அற்ற-வர்கள் என்று நோரிஸ் மற்றும் ஈங்கில்-ஹார்ட் என்னும் இரண்டு பிரிட்டிஷ் ஆராய்ச்சி-யாளர்கள் கண்டுள்ளனர் என்றும் ஜூகர்மேன் குறிப்பிடுகிறார். 88 விழுக்காடு மக்கள் தொடர்ந்து முறையாக தொழுவதாகவும் அவர்கள் குறிப்பிட்-டுள்ளனர்.

அய்ரோப்பாவில் நாத்திகம் பரவலாக நிலவுவதாக தோன்றுகிறது. பிரெஞ்சுக்காரர்களில் 33 விழுக்காடும், டச்சுக்காரர்களில் 27 விழுக்-காடும், பெல்ஜியத்துக்காரர்களில் 27 விழுக்காடும், ஜெர்மானியர்களில் 25 விழுக்காடும், பிரிட்டிஷ் காரர்களில் 20 விழுக்காடும் கடவுள் நம்பிக்-கையோ எந்த ஒரு ஆவி அல்லது வாழ்க்கையை இயக்கும் சக்தி இருப்பதில் நம்பிக்கையோ அற்றவர்கள் என்பதை 2005 இல் அய்ரோப்பா பற்றி வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை தெரிவிக்-கிறது. ஸ்கான்டிநேவிய மக்களில் அதிக எண்-ணிக்கை கொண்டவர்கள் கடவுள் நம்பிக்கை அற்ற-வர்களாக உள்ளனர். அமெரிக்காவில் நாத்தி-கம் மிகவும் பிரபலமடைந்து வருதாக பல ஆய்வு-கள் தெரிவிக்கின்றன. 2007 இல் பியூ ஆய்வின்படி 5 விழுக்காட்டினரும், 2008 ஹாரிஸ் கணக்கெடுப்-பின்படி 19 விழுக்காட்டினரும் தங்களை நாத்தி-கர்கள் என்று கூறிக் கொள்கின்றனர்.

- சுபோத் வர்மா-
நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா 5.6.2010
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

நன்றி-விடுதலை 09 06 10

ஞாயிறு, 30 மே, 2010

அந்தக் கடவுளுக்கு இது தெரியுமா?


பக்தி ஒரு பிசினஸ் என்று சொன்னால் சிலருக்குக் கோபம் பொத்துக் கொண்டு கிளம்புகிறது. ஆனந்தவிகடனில் 26.05.2010 வெளிவந்துள்ள இந்தக் கட்டுரைக்கு என்ன பதிலோ?

பிரார்த்தனை என்பது கடவுளுடன் உரையாடுவது. அதாவது, கடவுள் கேட்டுக்கொண்டு இருப்பார்... நம் மீது அக்கறை கொள்வார் என்று மனத்-துயர்களைப் பகிர்ந்துகொள்வது. அதற்காகத்தான் பெரும்பான்மையினர் கோயில்களுக்குப் போகிறார்கள்... வழிபடுகிறார்கள்.

கோயில் என்றதும் மனதில் சில சித்திரங்கள் தோன்றுகின்றன. வானு-யர்ந்த கோபுரத்தின் கம்பீரம், அகன்ற வாசல் கதவுகள். வெண்கலக் குமிழ் பதித்த படிகள். கோபுர வாசலில் நிற்கும் முகப்படாம் பூண்ட யானை. உள்ளே நடந்தால் செவியை நிறைக்கும் நாதஸ்வர மேளத்துடன் கூடிய மங்கள இசை. அபூர்வமான சிற்ப வேலைப்பாடு நிறைந்த தூண்கள். சுவர் ஓவியங்கள். அந்த ஓவியங்களைக் கூட உயிர்பெறச் செய்யும் ஓதுவாரின் தெய்விகக் குரல். கல் விளக்குகள். அதன் ஒளிர்விடும் சுடர்கள்.

பகலிலும் பாதி இருண்ட கர்ப்பக்-கிரகம். தீப ஒளியில் காணும் தெய்வ உருவங்கள். அதன் சர்வ அலங்காரம். பூ வேலை. மனதை ஒருமுகப்படுத்தும் மணி-யோசை. கண்மூடி, கைகூப்பி, தன்னை மறந்து நிற்கும் மனிதர்கள், அவர்களின் மெல்லிய உதட்டு அசைவுகள்; அவரவர் பிரார்த்தனைகள். சூடம் எரியும் மணம். சந்தனம், விபூதி, குங்குமம் அல்லது துளசித் தீர்த்தம். நீண்ட அமைதியான பிரகாரம். அங்கே அமர்ந்து ருசிமிக்க பிரசாதம் உண்டு, பிரச்சினைகளைக் கடவுளிடம் ஒப்படைத்துவிட்டோம். இனி, நிம்மதியாக வீடு திரும்பலாம் என ஆசுவாசம்கொள்ளும் முகங்கள்.

கோயிலைவிட்டு வெளியேறும் மனிதன் முகத்தில் சாந்தமும் நிம்மதியும் ஒன்று கூடியிருக்கும். இதுதான் கோயில் குறித்த எனது கடந்த கால நினைவு-கள். இந்தியாவின் பழைமையான, முக்கிய, பெரும்பான்மையான கோயில்-களுக்குச் சென்று இருக்கிறேன். வழி-பாடுகள், பிரார்த்தனைகளைவிடவும் கோயில் சார்ந்த சிற்ப ஓவியக் கலைகள் மற்றும் இசை மீது எனக்கு அதிக ஆர்வம் உண்டு. அதற்காகத் தேடித் தேடிப் பார்த்து இருக்கிறேன். சில கோயில்களை அதன் வடிவமைப்-பாகவும் அங்கு நிரம்பியுள்ள நிசப்தத்-துக்காகவும் தேடிப் போய் வருவேன்.

ஆனால், நடைமுறையில் தமிழகத்-தில் உள்ள புகழ்பெற்ற கோயில்கள் இப்படியா இருக்கின்றன. கோயில் வாசல் படியில் ஆரம்பித்து, வெளி-யேறும் வழி வரை நடைபெறும் வசூல்-வேட்டைக்கு நிகராக வேறு எங்குமே காண முடியாது. கோயிலுக்குள் செல்லும்போது குற்றவாளிகூட மனத் துய்மை பெறுவான் என்று சொல்-வார்கள். இன்றோ, கோயிலுக்குச் சென்று நிம்மதியைத் தொலைத்து வந்த கதை தமிழகத்தில் பலருக்கும் நடந்திருக்கிறது. கோயில்களில் நடைபெறும் தரிசன முறைகேடுகள், கையூட்டுகள், அதிகார அத்துமீறல்கள் பட்டியலிட முடியாதவை.

சில வாரங்களுக்கு முன்பாக நண்பர் ஒருவர் குழந்தைக்கு மொட்டை அடிக்க வேண்டும் என்று புகழ்பெற்ற கோயில் ஒன்றுக்குக் கிளம்பிக்கொண்டு இருந்-தார். வழி நெடுகப் பேசிக்கொண்டே காரில் போகலாம் என்று என்னையும் உடன் அழைத்து இருந்தார்.

பயணம் இனிமையாக இருந்தது. கோயில் அருகில் உள்ள விடுதியில் இரவு தங்கினோம். காலை 6 மணிக்குக் குழந்தைகள் மொட்டை போடும் இடத்துக்குச் சென்றோம். ஒரே கூட்டம். அதற்கான கட்டணச் சீட்டு வழங்கும் இடத்துக்குச் சென்று, சீட்டு வாங்கி ஒரு நாவிதர் முன்பு குழந்தையோடு உட்-கார்ந்தவுடன், அவர் தனக்குத் தனியாக 50 ரூபாய் தர வேண்டும் என்றபடியே குழந்தையின் தலையில் தண்ணீர் தெளித்தார். அதற்குத் தானே சீட்டு என்று நண்பர் கட்டணச் சீட்டைக் காட்டியதும், அது அப்படித்தான்... கொடுங்கள் என்று 50 ரூபாயைக் கேட்டு வாங்கிக் கொண்டார்.

குழந்தையின் தலையை அவர் கையாண்ட விதம் பெற்றோர்களைப் பயமுறுத்தியது. குழந்தை பயத்தில் அழுது வீறிட்டது. சுகாதாரம் அற்ற பிளேடு. வேகமாக இழுத்ததில் தலையில் ரத்தம். டெட்டால் பாட்டில்கூட அருகில் கிடையாது. அழுக்குத் துண்டால் குழந்தையின் தலையைத் துடைத்து விட்டு, அழைத்துப் போய்க் குளிக்க வையுங்கள் என்றார். எங்கே என்றதும் அழுக்கான தண்ணீர்க் குழாயைக் காட்டினார். அங்கே எப்படிக் குளிக்கவைப்பது என்றதும், அருகில் உள்ள குளியல் அறையில் போய்க் குளிக்க இன்னொரு 50 ரூபாய் கொடுங்கள் என்றார். அதைத் தந்து, குழந்தையைக் குளிக்கவைத்து, சந்தனம் தடவினார்கள். சந்தனம் வாசனையே இல்லை. கடலை மாவு போன்று இருந்-தது. ஆனால், அதன் விலை 40 ரூபாய்!

கோயில் உள்ளே செல்லும் முன்-பாகப் பூஜைப் பொருள்கள் வாங்கலாம் என்றால், அந்தக் கடைகளில் தேங்காய், பழத்தின் விலை 60 ரூபாய் என்றார்கள். ஒரு தேங்காய், இரண்டு வாழைப்பழம் 60 ரூபாயா என்று யாரும் கேட்க-வில்லை. பூ மாலை 200 ரூபாய். அதை-யும் மறுப்பு இன்றி வாங்கிக்கொண்-டார்கள். செருப்பு விடும் இடத்தில் கட்டணம் எதுவும் இல்லை என்று போட்டு இருந்தது. ஓர் ஆள் அய்ந்து ரூபாய் வசூல் செய்துகொண்டு இருந்தான். அதுவும் மறுபேச்சு இன்றித் தரவேண்டியதாகியது.

உள்ளே செல்லும்போது பொது தரிசனம், சிறப்புத் தரிசனம், வி.அய்.பி. தரிசனம் என்று மூன்று வகை. ஒவ்வொருவருக்கும் ஒரு கட்டணம். அதில் ஆளுக்கு 250 ரூபாய் கொடுத்து சிறப்புத் தரிசன டிக்கெட் வாங்கிக்-கொண்டார்கள். அந்த வரிசையும் நீண்டு இருந்தது. அந்த வரிசையில் முன்னே அழைத்தப் போகிறேன், தனியாக 100 ரூபாய் கொடுங்கள் என்று கோயில் ஊழியர் ஒருவர், தனியே அழைத்துப் போனார். அங்கே பணியில் நின்றிருந்த காவலர், தனக்கு ஏதாவது தரும்படியாகக் கேட்டதும் அவருக்குத் தனியே 50 ரூபாய் தரப்பட்டது.

சரி, சாமியைப் பார்க்கப் போகிறோம் என்று உள்ளே சென்றால்,அங்கே முக்கியப் பிரமுகரின் குடும்பம் ஒன்று சாவகாசமாக, சாமியை மறைத்து உட்கார்ந்து கொண்டு பூஜையில் இருந்தது. வீட்டில் நடப்பது போன்று அவர்களுக்காகவே ஒரு சிறப்பு பூஜை நடந்துகொண்டு இருந்தது. அது முடியும் வரை மற்றவர்கள் காத்-திருங்கள் என்றார்கள். குழந்தை காற்று இல்-லாமல் அழுதது. அதை இடை-யூறாகக் கருதிய முக்கியப் பிரமுகர், குழந்தையை வெளியே அழைத்துச் செல்லுங்கள் என்று கோபப்பட்டார்.

அந்தப் பிரமுகருக்கு மாலை மரியாதை அணிவிக்கப்பட்டு, தட்டில் அவர் சில 500 ரூபாய்களை அள்ளிப்-போட்டு எழுந்த பிறகு, கடவுள் மற்றவர்களுக்குத் தெரிய ஆரம்பித்தார். கூட்டம் அதிகம். சாமியைப் பார்த்தது போதும்... வெளியே போங்கள் என விரட்டிக்கொண்டு இருந்தார்கள். உண்டியலில் பணம் போட வேண்-டாம், தட்டுக் காணிக்கை போடுங்கள் என்ற குரல் இடைவிடாமல் கேட்டுக்கொண்டே இருந்தது.

கூட்டத்தில் சிக்கிய குழந்தை அழுது, உதடு துடித்துப் போனது. அவசரமாகக் குழந்தையைக் கடவுள் முன் காட்டி விட்டு வெளியே வந்தோம். குழந்-தைக்குத் தாகமாக இருக்கக் கூடும் என்று பாட்டி சொன்னார். தண்ணீர் எங்கே கிடைக்கும் எனத் தேடினால், கோயிலில் சுகாதாரமான குடிநீர் கிடையாது. வெளியேதான் போக-வேண்டும் என்றார்கள். பிரகாரத்தில் அமர்ந்தபடியே ஏன்டா கோயிலுக்கு வந்தோம் என்று ஒரு குடும்பம் புலம்பிக் கொண்டு இருந்தது. ஒரு வெள்ளைக்-காரர் அங்கிருந்த ஒரு சிலையைப் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தார். புகைப்படம் எடுக்கக்கூடாது என்று கோயில் ஊழியர் மிரட்டியதும், அவர் தன் பாக்கெட்டில் இருந்து 100 ரூபாயை எடுத்து நீட்டினார். வாங்கிக் கொண்டு அந்த ஊழியர் சிரித்தபடியே வெளியேறினார்.

சரி, பிரசாதமாவது வாங்கி வருகிறேன் என்று போன நண்பர் அசதியோடு திரும்பி வந்து, ஒரே கொள்ளையா இருக்கு. பிரசாதம் விலை அதிகம். வாய்ல வைக்கவே முடியலை என்று புலம்பினார். கோயிலுக்கு வந்ததுக்கு சாமிப்படம் ஒன்று வாங்கிக்கொள்ளலாம் என்று அருகில் உள்ள கடைக்குப் போய், நண்பரின் மனைவி விலையைக் கேட்டதும் அவருக்குத் தலை சுற்றியது.

ஏழை எளிய மக்கள் நிம்மதியும் சாந்தியும் தேடி வரும் கோயில்கள் ஏன் இப்படிக் கொள்ளை அடிக்கும் மய்யமாக மாறிப்போனது. காசை வாரி இறைத்தால் மட்டுமே கடவுளை அருகில் சென்று வணங்க முடியும் என்ற அவலத்தை ஏன் சகித்துக்-கொண்டு இருக்கிறோம். கோயில், கொடியவர்களின் கூடாரமாகிவிடக்-கூடாது என்று கொதித்து எழுந்தான் பராசக்தி படத்தில் குணசேகரன். ஆனால், இன்று தமிழகக் கோயில்-களைப்போல பக்தர்களைத் துச்சமாக, அவமரியாதையாக நடத்தும் கோயில்-கள் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.

பல லட்சம் பேர் கலந்துகொள்ளும் ஹரித்துவாரின் கும்பமேளாவில் ஓர் இடம்கூட அசுத்தமாக இல்லை. குப்பைகள், கழிவுகளைக் காண முடி-யாது. அவ்வளவு தூய்மை பராமரிக்-கப்படுகிறது. தரிசனம் துவங்கி, சாப்-பாடு, தங்கும் இடம் வரை அத்தனையும் இலவசம். ஆனால், தொடரும் தமிழகக் கோயில்களின் அவலத்தைப் போக்-கும்படியாக ஏதாவது ஒரு கடவுளிடம் முறையிட வேண்டும் என்றால்கூட அதற்கும் நாம் சாசு செலவழித்தே ஆக வேண்டிய துர்பாக்கிய நிலைதான்.

சத்யஜித் ரே ஜனசத்ரு என்ற ஒரு வங்காளப் படத்தை இயக்கி உள்ளார். அற்புதமான படம். இப்சனின் நாடகத்தை மய்யமாகக் கொண்டது. ஒரு கோயில் குளத்தில் உள்ள தண்ணீர் பராமரிப்பு இல்லாமல் இருந்ததால், கிருமிகள் நிறைந்திருந்தன. அதைத் தீர்த்தமாகப் பக்தர்களுக்குத் தரு-கிறார்கள். அதனால், ஒரு நோய் பரவத் துவங்குகிறது. இதைப்பற்றி ஆராய்ந்த மருத்துவர் ஒருவர், கோயில் குளம்தான் இதற்குக் காரணம். எனவே, அதைத் தற்காலிகமாக மூடிவிடுங்கள் என்று அறிவுறுத்துகிறார்.

அதை ஒருவரும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அத்துடன், கடவுளின் புனிதக் குளத்தை ஏளனம் செய்கிறார் என்று அவர் மீது கோபப்படுகிறார்கள். அவரோ, தான் சொல்வது மக்கள் ஆரோக்கியம் தொடர்பான அக்கறை. அதில் புனித மறுப்பு என்று எதுவும் இல்லை. தயவு செய்து புரிந்து-கொள்ளுங்கள் என்கிறார். சொந்தக் குடும்பம்கூட அதைப் புரிந்து கொள்-ளாமல் போகிறது. மக்கள் விரோதியாக அவர் சித்திரிக்கப்பட்டு, அவருக்கு எதிராகப் போராட்டம் நடை-பெறுகிறது. பக்தியின் பெயரால் நாம் ஏன் பகுத்தறிவை, விஞ்ஞானத்தை மறந்து போனோம் என்று மருத்துவர் கவலைப்படுகிறார். இந்தக் கவலை திரைப்படத்தில் இடம் பெற்ற விஷயம் மட்டும் இல்லை. நம்மைச் சுற்றிய கோயில்களின் முறைகேடுகளைக் காணும் போதும் அதே கேள்வியே மனதில் எழுகிறது. அதற்கான மாற்று-வழிதான் தெரியாமல் இருக்கிறது.

நன்றி: ஆனந்த விகடன் 26.05.2010

இறைவா, இது என்ன சோதனை?

மின்சாரம்
இது நாம் கொடுத்த தலைப்பு அல்ல! தினமலர் பார்ப்பன ஏடு கொடுத்த தலைப்பு!

காளஹஸ்தி ராஜகோபுரம் இடிந்து வீழ்ந்தது அல்லவா! இடிந்து வீழ்ந்து சுக்கல் நூறாகச் சிதறிக் கிடக்கும் படங்களைப் போட்டு அதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்புதான் இறைவா இது என்ன சோதனை?

ராஜ கோபுரம் இடிந்து வீழ்ந்தது. இறைவனுக்குத் தான் சோதனையே தவிர மற்றவர்களுக்கு அல்ல! நியாய-மாக இந்தக் கேள்வி மாற்றித் தலை கீழாகக் கேட்கப்பட்டு இருக்க வேண்டும்.

இறைவா உனக்கு ஏன் இந்த சோதனை? என்று கேட்டு இருந்தால் தினமலர் கூட்டத்துக்குப் புத்தி கொஞ்சம் வேலை செய்ய ஆரம்பித்-திருக்கிறது என்று கருத இடம் உண்டு.

பஞ்ச பூதத்தலங்களில் ஒன்று என்று பகவானை ஆகாயத்தில் தூக்கி வைத்துக் கொஞ்சுவது. இறைஞ்சுவது. அந்தப் பகவானின் சக்திக்குச் சவால் வந்து விட்ட பிறகு பகவான் சோதிக்-கிறான் என்பது பச்சையான பசப்புத்-தனம் என்பதல்லாமல் வேறு என்னவாம்?

பக்தியின் பரிதாபப் பள்ளத்தாக்கில் வீழ்ந்து கிடக்கும் பாமரர்கள் விழித்த விடக் கூடாது. வீழ்ந்த பள்ளத்திலேயே மீண்டும் மீண்டும் உருண்டு புரள வேண்டும் என்ற சூழ்ச்சிதான் இதில் அடங்கியிருக்கிறது.

ஒவ்வொரு கோயிலுக்கும் தலப் புராணங்களை எழுதிக் குவித்து வைத்துள்ளார்களே. அதில் குடி கொண்ட பகவானின் பராக்கிரமங் களையெல்லாம் பத்தி பத்தியாக குவித்து வைத்துள்ளார்களே!

கோயில் திருக்குளத்துக்குப் பதிகங்கள் பாடி வைத்திருக்கிறார்களே! மதுரைப் பொற்றாமரைக் குளத்தில் குளித்தெழுந்தால் தாயைப் புணர்ந்த பாவமும் கூடப் போடும் என்று தங்களின் பார்ப்பனக் கோரப் புத்தியைப் பதிவு செய்து வைத்துள்ளார்களே.

முதலையுண்ட பாலகனை மீட்டது எது? எலும்பைப் பெண்ணுருவாக்கியது எது?

இந்தக் கடவுள் சக்திகள் எல்லாம் காணாமல் போனது ஏன்?

காளஹஸ்தியில் கோயில் அருகே ஓடும் நதியில் குளித்தால் ராகு _ கேது படித்த பாவங்கள் போகுமாம்.

ஜெகன்மோகினி என்ற திரைப்-படத்தில் விட்டலாச்சாரியார் காட்டிய காட்சி அது! நாயும், ஆடும் தோஷம் நீங்கப் பெற்றனவாம். அந்தத் திரைப்படம் வெளிவந்ததற்குப் பிறகு அக்கோயி-லுக்குப் பக்தர்கள் திரள ஆரம்பித்தார்-களாம். நல்ல வசூலாம் -_ இடிந்து கிடந்த கோயிலைச் செப்பனிட்டார்-களாம். பல ஆண்டுகளுக்குப்பின் அந்தப் பகுதிக்கு விட்டலாச்சாரியார் சென்றபோது கோயில் பார்ப்பனர்களும், பக்தர்களும் சூழ்ந்து கொண்டு நன்றி தெரிவித்தார்களாம்.

காளஹஸ்தி கோவிலுக்குப் புனர்-வாழ்வு வந்ததுகூட, ஜெகன்மோகினி திரைப்படத்தின் மூலம்தான் என்பது காளஹஸ்தி அப்பனுக்குப் புகழ் சேர்க்-குமா? விட்டலாச்சாரியார் அல்லவா சாதனையைத் தட்டிக்கொண்டு போகிறார்!

அதுவும் கோபுரம் என்றால் சாதாரணமா? கோபுரம் இறைவனின் திருவடிகளைக் குறிக்கிறதாம். அதனால் கோபுரத்தரிசனம் விசேஷமானது என்கிறார்கள் ஆகமவாதிகள்.

அந்த இறைவனின் திருவடி உடைந்து சுக்கல் நூறாகிப் போய் விட்டதே! இதற்கு எந்தக் கட்டுப் போடப் போகிறார்கள்? புத்தூர் கட்டுதானா?

ஆமாம், வாஸ்து பார்த்துத்தானே கோயிலையும், கோபுரத்தையும் கட்டி-யிருப்பார்கள்? அப்படி இருக்கும்போது ராஜ கோபுரம் தலைகுப்புற வீழ்ந்தது ஏன்?

வாஸ்துவின் வண்ட வாளமும் தாண்டவாளத்தில் ஏறிவிட்டதே! இனி எதை வைத்துக் கோயிலையோ, கோபுரத்தையோ, கோயிலுக்குள் குந்த வைக்கப்பட்டுள்ள கடவுளையோ காப்பாற்றப் போகிறார்கள்?

பக்தி பெருகிவிட்டது; பக்தி பெருகிவிட்டது. பகுத்தறிவாளர்களே, நீங்கள் தோல்வி அடைந்து விட்டீர்கள் என்று பம்மாத்துப் பேசும் பக்தர்கள், காளஹஸ்தி அப்பனின் கோபுரம் குப்புற வீழ்ந்து மீசையில் மண் ஒட்டிய பிறகு உங்கள் பக்தியை ஒருமுறை புரட்டிப் போட்டுச் சிந்திப்பீர்களா? கடவுள் கல் என்று கறுப்புச் சட்டைக்-காரர்கள் சொன்னது சரியாகப் போய்விட்டது என்று ஒப்புக்கொள்ளும் அறிவு நாணயம் உங்களுக்கு உண்டா?

பிழைப்புக் கெட்டுப் போய்விடுமே. பகவானுக்கு ஒரு ஹானி என்றால் அது பார்ப்பனர் வயிற்றுச் சோற்றுக்கு வந்த திண்டாட்டமாயிற்றே! உயர்ஜாதி மமதையின் மீது விழுந்த மண்வெட்டி அடியாயிற்றே!

விட்டுக் கொடுத்து விடுவார்களா? உடனே ஜோதிடக்கட்டை எடுத்துப் புறப்பட்டு விட்டார்கள்.

ஏதோ.. ஏதோ தெரியவில்லை; நாட்-டுக்குச் சோதனை! உடனே பரிகாரம் காணப்பட வேண்டும்; அல்லா விட்-டால் ஆபத்துக்கு அணை கட்ட முடி-யாது என்று தோல்வியையும் வெற்றிக்-கான தோரணையாக மாற்றி விடு-வார்கள்.

மக்களிடம்தான் பயபக்தி (பயமும் பக்தியும்) பயங்கரமாகக் இருக்கிறதே! இந்த முதலீடு ஒன்று போதாதா பிழைக்கத் தெரிந்த பிர்மாவின் முகத்தில் பிறந்த பிரிவினருக்கு?

பிரசித்தி பெற்ற காளஹஸ்தி சிவன் கோயில் ராஜகோபுரம் இடிந்து வீழ்ந்த-தால் சில ராசிக்காரர்களுக்கு குறிப்பாக, ராகு, கேது ராசிக்காரர்களுக்குச் சோதனை ஏற்படுமாம். அரசியல் தலைவர்களுக்கும் ஆபத்து நேரிடுமாம்.

இந்த இரு கிரகங்களுக்கும் உரியவர்கள் உடனே பரிகாரப் பூஜைகளில் ஈடுபட வேண்டுமாம். பரிகாரப் பூஜை செய்தால்தானே பார்ப்பான் வீட்டுக் கல்லாப் பெட்டி நிரம்பி வழியும்?

அரசியல்வாதிகளுக்கு ஆபத்து என்று சொன்னால்தானே கனமான வருமானம் கணக்கில் காட்டாத கறுப் புப் பணக் கத்தைகள் வந்து குவியும் (பரவாயில்லை ஜெயலலிதா முந்திக் கொண்டார்; கடந்த வாரம்தான் காளஹஸ்தி சென்று பூஜைகள் நடத்திக் கனமான வகையில் கவனித்து விட்டு வந்தார்).

ஜோதிடர் பூவை நாராயணன் கூறுகிறார் கேளுங்கள்:

பொதுவாக கோயில் கோபுரம் இடிந்து விழுதல், கொடிமரம் எரிதல் போன்ற நடக்கக்கூடாத வினோத சம்பவங்கள் ஏற்படுவது தேச நலனைப் பாதிக்கும்.

இதற்கு வைரணாச கல்ப சூத்திரத் தில் கூறியுள்ளபடி பஞ்ச சுக்தங்களைப் படித்து அற்புத சாந்தி ஹோமம் செய்ய வேண்டும்.

புரிகிறதா! ஹோமத்திலேயே அற்புத ஹோமமாம். தொகை அதிகம் என்று பொருள். கோபுரம் இருந்தாலும் கொள்ளை! கோபுரம் இடிந்து வீழ்ந்தாலும் கொள்ளை! இப்படி எது நடந்தாலும் சுரண்டல் கொள்ளைக்கு வசதி செய்து வைத்துள்ள பார்ப்பன சூழ்ச்சி _ உலகில் வேறு எங்கும் கேள்விப்பட்டிட முடியாத ஒன்று.

அண்டப் புளுகு ஆகாயப் புளுகு என்பதற்கு மேலாக இன்னொன்று இருக்கிறது!

அதுதான் இந்துமதப் புளுகு! பார்ப்பனீயப் புளுகு!

ராகு கேது கிரகதோஷம் என்கிறார்களே, அப்படி ஏதாவது கிரகங்கள் உண்டு என்று எந்த விஞ்ஞானத்தில் கூறப்பட்டுள்ளது? இல்லாத கிரகங்களுக்குத் தோஷமாம். யாகமாம். பூஜையாம். அட, அக்கிரமமே உன்பெயர்தான் அக்கிரகாரமா?

நன்றி- விடுதலை

வெள்ளி, 9 ஏப்ரல், 2010

அய்ன்ஸ்டீனுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா?

மதம் இல்லாத அறிவியல் முடமானது; அறிவியலற்ற மதம் குருடானது என்று கூறினார் ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன் என்று இதுவரை கூறிக் கொண்டு வாதிட்டுக் கொண்டிருந்-தார்கள். அதைத் தற்போது தெளிவுபடுத்திவிட்டார் அய்ன்ஸ்டீன். 1954இல் அவர் ஜெர்மன் மொழியில் எரிக்குட்-கின்ட் எனும் தத்துவாசிரியருக்கு எழுதிய கடிதத்-தில் தாம் தமது 12ஆம் வயதிலிருந்தே மத நம்பிக்-கையை இழந்து விட்டதாகவும், மதத்தில் கூறப்-படுபவை எல்லாம் பொய் என்றும் தெளிவு-படுத்தியிருக்கிறார். இந்தக் கொள்கையி-லிருந்து தாம் பின்னோக்கிச் செல்லவில்லை என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இந்தக் கடிதம் சில நாள்களுக்கு முன்பு ஏலம் விடப்பட்டது. கடவுள் மயக்கம் என்ற நூலை எழுதிய ரிச்சர்டு டாகின்ஸ் இதை ஏலம் கேட்டார். ஆனால், பெரும் தொகைக்கு வேறொருவர் 4 லட்சத்து 4 ஆயிரம் டாலருக்கு ஏலம் எடுத்துள்ளார்.

பைபிளை, சிறுபிள்ளைத்தனமான நூல் என்கிறார். பிரார்த்தனைக்குச் செவி சாய்த்து நிறைவேற்றி வைக்கிறார் கடவுள் என்பது சிரிப்-பூட்டக்கூடிய ஒன்று என்று கூறிவிட்டார். இறப்புக்குப் பின் ஒரு வாழ்வு இருக்கிறது என்கிற கூத்து, அப்படி இருக்கவேண்டும் என்று நினைப்-பவர்களின் ஆசை என்று புறந்தள்ளி விட்டார். கடவுள் நம்பிக்கை என்பது குழந்தைத் தனமான மூடநம்பிக்கை என்று தெளிவாகத் தெரிவித்து விட்டார். கடவுள் எனும் சொல், மனித மனத்தின் பலவீனம்தான் ஒழிய வேறு ஒன்றுமில்லை. பைபிளில் உள்ளவை காட்டுமிராண்டிக் காலக் கதைகளின் தொகுப்பு என்று கடும் உண்மைகளைத் தெரியப்படுத்தி உள்ளார்.

அவரோ யூதர். ஆனாலும், யூதர்கள் கடவுளால் தெரிந்தெடுத்து ஆசீர்வதிக்கப்பட்ட மக்கள் என்பதை மறுக்கிறார். மற்றைய மனிதர்களைப் போன்றவர்கள் தான் யூதர்களும் என்று கூறிவிட்டார். ராமகோபாலன்களும், சு.சாமிகளும் கடவுள் என்கிற கதாபாத்திரத்தை (ராமனை)க் கட்டி அழுது கொண்டிருக்கிறதுகள்! என்றுதான் இதுகளுக்கு அறிவு வருமோ?

செங்கோ

கடவுளும் மதமும் இரட்டைப் பிள்ளைகள் அல்ல

மதம் என்னும் வார்த்தைக்குப் பலவித அர்த்தங்களும், கருத்துகளும் சொல்லப்-படுகின்றன.

உதாரணமாக ஒருவர், என்னுடைய மதம் யார் மனத்தையும் புண்படுத்தாமலிருப்பதும், யாருக்கும் என்னால் கூடிய நன்மை செய்வதும்தான் என்று சொல்லுகிறார்.

மற்றொருவர், என்னுடைய மதம் கடவு-ளைப் பற்றிக் கவலைப்படாத நாஸ்திக மதம் தான் என்கின்றார்.

மற்றொருவர், என்னுடைய மதம் கடவுள் இல்லை; ஆத்மா இல்லை. ஆனால், அதற்குத் தகுந்த பலன் உண்டு என்பதுதான் என்கிறார்.

மற்றொருவர், நான் கருதி இருக்கும் மதம் திமிர் அல்லது கொழுப்பு என்கிறார்.

மற்றொருவர், மதம் என்னும் வார்த்தைக்குக் கொள்கை அல்லது கடமை என்பது அர்த்தம் என்கிறார்.

மற்றொருவர், என்னுடைய மதம் விஞ்ஞானம் என்கிறார்.

மற்றொருவர், என்னுடைய மதம் மனித ஜீவ அபிமானம்தான் என்கிறார்.

மற்றொருவர், என்னுடைய மதம் பொதுவு-டைமைக் கொள்கை என்கிறார்.

இப்படியே இன்னும் பலவிதமாய், மதம் என்னும் வார்த்தைக்குத் தனித்தனிக் கருத்துகள் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தச் சந்தர்ப்பத்தில் அவைகளைப் பற்றி எல்லாம் விவரிக்க வேண்டியதில்லை என்று கருதுகிறோம்.

ஆனால், முகப்பில் கூறிய இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் முதலிய மதங்களின் அஸ்திவாரம் ஒன்றுபோலவே இருந்தாலும், அதன்மேல் கட்டப்-பட்ட கட்டடங்களில் வித்தியாசங்கள் இருக்கின்றன என்பதை ஒப்புக் கொள்கிறோம்.

ஒருவன் உண்மையாகவே மதம் இல்லாமல் இருப்பது நாஸ்திகம் என்று கருதிக் கொண்டு ஏதாவது ஒரு மதத்தின் பேரால் உயிர்வாழ வேண்டியவனாய் இருக்கிறான்; ஆதலால், எப்படியாவது தான் நாஸ்திகன் என்று சொல்லப்படாமல் இருக்க வேண்டும்; மற்றபடி மதக் கொள்கைகள் எவை, எப்படி இருந்தாலும் தான் இலட்சியம் செய்வதில்லை என்கின்ற கருத்தின் மீதே தனக்குள் எவ்விதக் கொள்-கையும் இல்லாமல், ஒரு மதத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு, ஏதோ ஒரு மத வேஷத்தைப் போட்டுக் கொண்டு இருக்க வேண்டியவனாக இருக்கிறான்.

மற்றும் பலரும் அதுபோலவே மதங்களுக்கு உள்ள செல்வாக்குக்குப் பயந்து கொண்டு மத வேஷக்காரர்-களாய் இருக்கிறார்கள். பரத்தில் மேன்மை அடைவதற்கு என்று சிலர் மதவாதி-களாய் இருப்பது போலவே, இகத்-தில் மேன்மை அடைவதற்கு என்று சிலர் மதவாதிகளாய் இருக்கிறார்கள்.

பொதுவாகப் பார்க்கப்போனால், கடவுள் ஏற்பட்ட வெகு காலத்துக்குப் பிறகுதான் மதம் ஏற்பட்டு இருக்க-வேண்டுமே ஒழிய, கடவுளும் மதமும் இரட்டைப் பிள்ளைகள்போல் பிறந்தவை அல்ல.

எப்படி இருந்தாலும், மதங்களானவை இன்று சடங்காகவும், வேஷமாகவும் இருக்-கின்றனவே ஒழிய, கொள்கையாகக் கூட எந்த மதமும் அனுபவத்தில் இருக்க-வில்லை; புத்தகங்-களில் பல கொள்கைகள் இந்திருக்கலாம்; இன்னும் இருந்து கொண்டிருக்கலாம். காரியத்தில் அக் கொள்கைகள் பெரிதும் அமலில் இல்லை.

ஆகவே, அமலில் இல்லாத கொள்கை-களைக் கொண்ட மதங்களில் எந்த மதம் மேலானது என்றோ, எந்த மதக் கொள்கை மேலானது என்றோ வாதிப்ப-தானது, ஆகாயத்-தில் தொங்கிக் கொண்டிருக்கும் கோட்டை-களில் எது பலமான கட்டடம் என்றும், எது வசிப்பதற்குச் சவுகரியமானது என்றும் கேட்பதுபோல் தான் ஆகும்.

முதலாவதாக, ஒரு மதத்துக்குக் கொள்-கைகள் எப்படிப்பட்டவையாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி முடிவு செய்து கொள்ள வேண்டும்.

ஒரு கொள்கை நல்ல கொள்கை என்றால், அதற்கு இரண்டு சக்திகள் இருக்க வேண்டும். முதலாவது, அவை எல்லா மக்களுக்கும் ஒன்று-போல் அனுபோகத்தில் சமமாக நடத்தக்-கூடியனவாக இருக்கவேண்டும். அதோடு கூடவே அக் கொள்கைகள் எல்லா மக்-களாலும், எவ்வித நிர்ப்பந்தமும் இல்லாமல் தாமாகவே பின்பற்றித் தீர வேண்டியதாகவும் இருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட தத்துவங்களைக் கொண்ட கொள்கையை இதுவரை எந்தப் பெரிய வரும் கண்டு பிடிக்கவுமில்லை; எந்த மதமும் கொண்டிருக்கவும் இல்லை.

அது செய்தால் பாவம், இது செய்தால் மோட்சம் என்றும்; அது செய்தால் தண்டனை, இது செய்தால் தூக்கு என்றும் இப்படியாகப் பல நிர்ப்பந்தங்கள், பயம், தண்டனை, தண்டனை ஆகியவைகளின் பாதுகாப்பில் ஏற்படுத்தப்பட்ட கொள்கையாகவும், அமலில் கொண்டு வர எப்போதுமே முடியாதன-வாகவும், அமலில் கொண்டு வர மிகவும் கஷ்டப்பட வேண்டியவை-யாகவும், மனிதனால் சாதாரணமாகச் செய்யக் கூடியதும், செய்-வதற்கு ஆசையுண்டாக்கக்கூடியதும் அல்லாத-வையாகவும் இருக்கக்கூடிய கொள்கை-களையேதான் எந்த மதமும் கொண்டிருக்கிறது.

எந்தக் கொள்கையாவது கடவுளால் உண்டாக்-கப்-பட்டதாகவோ அல்லது கடவுளு-க்கு இஷ்டமான-தாகவோ இருந்திருக்குமானால், அது மக்களுக்கு மிகவும் இஷ்டமானதாகவும், செய்வதற்கு மிகவும் ஆசையுடையதாகவும், சுலபத்தில் செய்து முடிக்கக்-கூடியதாகவும் இருந்திருக்க வேண்டாமா? கடவுளுக்கு இஷ்டமான கொள்கை மனிதனுக்குக் கசப்பான-தா-கவும், பெரும்பான்மையோருக்குச் செய்வ-தற்கு முடியாத-தாகவும் இருப்பதற்குக் காரணம் என்ன?

ஆகவே, கடவுளின் பேரால் மதத்தின்மூலம் மத கர்த்தாக்களால் சொல்லப்பட்ட கொள்-கைகள் என்பவை, சொன்னவர்களுக்கு அவர்களது புத்தித் திறமையும், அக்காலத்-துக்குச் சரி என்று பட்ட கருத்துகளையும் கொண்டவையே தவிர, எந்தக் கொள்கையும் எந்தக் கடவுளாலும் சிருஷ்டிக்கப்-பட்ட-தல்லவென்றே சுயமரியாதைக் காரர்கள் எழுதுகிறார்கள்.

இன்று மதமானது மக்களின் கூட்டு வாழ்க்கையின் அவசியத்துக்கு ஏற்ற கொள்கை-களைக் கொண்டது என்பதுடன் அவை பகுத்தறிவுக்கு ஒத்ததாகவும், கால தேச வர்த்தமானத்துக்கு ஏற்ப திருத்திக் கொள்ளக் கூடியதாகவும் சகல மக்களுக்கும் பலன் ஒன்று போல் உண்டாகக்கூடியதாகவும் இருக்கத்தக்க கொள்கைகள் கொண்டது என்றால், அதை சுயமரியாதைக்காரர்கள் மறுப்பதற்கு முன் வரமாட்டார்கள்.

(பகுத்தறிவு, கட்டுரை - மார்ச் 1936)

திங்கள், 5 ஏப்ரல், 2010

கடவுள் இல்லை: பாலா பரபரப்பு பேட்டி


நான் கடவுள் படத்தை இயக்கியதற்காக தேசிய விருது கிடைத்திருக்கிறது. நீங்கள், கடவுளுக்கு நன்றி தெரிவித்தீர்களா?



நான் கடவுள்' படத்தில் கடவுளா வந்து நடித்தார்? கடவுளா வந்து மேக்கப் போட்டார்? கடவுளா வந்து உடையலங்காரம் செய்தார்? கடவுளா வந்து காமிராவை ஆபரேட் பண்ணினார்? கஷ்டப்பட்டு நடித்தவர்கள் நடிகர்-நடிகைகள். கஷ்டப்பட்டு உழைத்தவர்கள், தொழிலாளர்கள். இல்லாத ஒருவருக்கு நான் ஏன் நன்றி சொல்ல வேண்டும்?

நாத்திகம்



பிச்சைக்காரனுக்குச் சோறு போடுவதும் நாத்திகமேயாகும். ஏனெனில் கடவுள் பார்த்து ஒருவனை அவனது கர்மத்திற்காகப் பட்டினி போட்டிருக்கும்போது நாம் அவனுக்குச் சோறு போடுவது கடவுளுக்கு விரோதமான காரியமே யாகும். அதாவது, கடவுளே நம்பாத - கடவுள் செயலை நம்பாத செயலே யாகும்.

தங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு என்று காட்டிக் கொள்கிற எவரும், கடவுள் நம்பிக்கையாளர்கள் என்கின்ற எவரும் கடவுளை நம்பி எந்தக் காரியத்தையும் கடவுளிடம் விடுவது கிடையாது. தலைவலி வந்தால்கூட டாக்டரிடம்தான் செல்கிறார்கள். இவர்கள் எப்படி உண்மையான கடவுள் நம்பிக்கைக்காரர்களாக இருக்க முடியும்? எனவே தான் இவர்களைச் சிந்தனையாளராக இல்லாத நாத்திகர்கள் என்கின்றேன்.

நாத்திகம் என்பது
நாத்திகம் அவரவர்கள் மன உணர்ச்சி - ஆராய்ச்சித் திறன் ஆகியவைகளைக் கொண்டதே தவிர அது ஒரு குணமல்ல; ஒரு கட்சி அல்ல; ஒரு மத மல்ல.

ஒருவனை ஒருவன் நாத்திகன், கடவுள் இல்லை என்று சொல்லுகிறவன் என்று சொல்லுவதே நாத்திகமாகும். கடவுளைச் சரியாக அறியாத்தே யாகும். அந்த வார்த்தையை உண்டாக்கினவர்களே நல்ல நாத்திகர்களாவர். கடவுள் இருந்தால் ஒரு மனிதன் இல்லை என்று சொல்ல முடியுமா? அல்லது ஒருவன் இல்லை என்று சொல்லுகிறான் என்று மற்றவன் நினைக்கவாவது முடியுமா? ஆகவே நாத்திகம், நாத்திகன் என்பன கடவுள் வியாபாரக்காரர்கள் தங்கள் வியாபாரத்துக்கு ஆதரவாகக் கண்டுபிடித்த உப கருவிகளேயாகும். கடவுள் வியாபாரக்காரனுக்கு அல்லாமல் மற்றவனுக்கு இந்தக் கவலையே இருக்க நியாயமில்லை.

நாத்திகன் ஆத்திகன்
காரண காரியத்தைத் தெரிந்து அதன்படி நடப்பவன் நாத்திகன். வெறும் நம்பிக்கையை ஆதாரமாக வைத்துச் சாத்திரம் சொல்லுகிறது, பெரியோர்கள் சொல்லுகிறார்கள் என்பதை நம்பி அந்த நம்பிக்கையின் படி நடப்பவன் ஆத்திகன்.

நாத்திகன் என்பதற்குக் கடவுள் இல்லை யென்பவன் என்று பொருளல்ல; புராண இதிகாச வேத சாத்திரங்களை ஒப்புக் கொள்ளாதவர்களையே, அவற்றைப் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்ப்பவர்களையே, பார்ப்பனர்கள் நாத்திகர்கள் என்று எழுதி வைத்திருக்கின்றனர். இராமாயணத்தில் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்த புத்தர் முதலானவர்களை நாத்திகர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பகுத்தறிவுக்கும் நாத்திகத்திற்கும் உள்ள உறவு
சமுதாயச் சீர்திருத்தத்தின் கடைசி எல்லை பொது உடைமை என்பதைப் போலவே நாத்திகமும் அறிவின் உண்மையான கடைசி எல்லையாகும்.

நாத்திகத்தின் பிறப்படம்
எங்கு எங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ, சமத்துவத்திற்கு இட மில்லையோ ங்கெல்லாம் இருந்துதான் நாத்திகம் முளைக்கின்றது. கிருத்துவையும், முகமது நபியையும் கூட நாத்திகர்கள் என்று யூதர்கள் சொன்னதற்கும் அவர்களது சமதர்மமும், சீர்திருத்தமும்தான் காரணமாகும்.

இருக்கிற கடவுளை இல்லை என்று சொல்லுவதில் சொல்லுபவனுக்கு என்ன லாபம்? அல்லது சர்வத்தையும் செய்விக்கிற, சொல்லச் செய்கிற ஒரு கடவுள் இப்படியாக ஒருவனைச் சொல்லவும் நினைக்கவும் செய்வதில் கடவுளுக்குத்தானாகட்டும் என்ன லாபம் வரும்? ஆகவே ஒரு மனிதன் இப்படி முட்டாள் தனமான காரயத்தைச் செய்வானா அல்லது ஒரு கடவுள் இப்படிப் பைத்தியக்காரத்தனமான காரியதைதச் செய்விப்பாரா என்பதையாவது, ஒருவன் கடுகளவு நினைத்தாலும், சிந்திக்கும் சக்தி இருந்தாலும் மற்றவனை நாத்திகன், கடவுளை மறுக்கிறவன் என்று குறையோ குற்றமோ சொல்ல மாட்டான்.

நாத்திகனாகவோ, நாத்திகனாவதற்குத் தயாராகவோ, நாத்திகன் என்று அழைக்கப்படுவதற்குக் கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது.